முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க் குற்றங்கள் புரிந்த இலங்கைக்கு இனி எந்தவிதமான உதவியும் இல்லை அமெரிக்கா எம்.பி.க்கள் குழுவில் தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை - 26 - போர்க் குற்றங்கள் புரிந்த இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. வெளிவிவகாரங்களுக்கான அமெரிக்க எம்.பி.க்கள் குழு இலங்கைக்கு எந்தவிதமான உதவியும் செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததாகவும், தமிழ் பெண்களை கற்பழித்து கொன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தினர். ஐ.நா. சபையும் அதை உறுதி செய்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது. அந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைப்பதாக இருந்தது. அப்பாவித் தமிழர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சி, பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கற்பழிக்கப்படும் காட்சி ஆகியவை வெளியிடப்பட்டன. இதையடுத்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுப்பெற்றன. இந்த நிலையில் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். முதல் தீர்மானமாக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றன. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மத்திய அரசிடமும் முதல்வர் இதனை வலியுறுத்தினார். 

இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போதும் இலங்கை விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்களது சொந்த பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட ஹிலாரி கிளிண்டன், தமிழர்களுக்கு சம உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டியில் கூறினார். இலங்கை போர்க் குற்றக் காட்சிகள் அமெரிக்க எம்.பி.க்கள் மத்தியிலும் ஒளிபரப்பப்பட்டு அதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் கண்ணீர் வடித்தனர். போர்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசுமீது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இந்த சூழ்நிலையில் இலங்கை அரசு மீது பொருளாதார தடையும் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரங்களுக்கான எம்.பி.க்கள் குழு இந்த தீர்மானத்தை கொண்டுவந்தது. அது குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு அமெரிக்கா அளித்துவரும் மனிதநேய உதவிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும். இதன் மூலம் ராஜபக்சே அரசுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்