முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நங்கநல்லூர் மாடர்ன் பள்ளியில் சர்வதேச செஸ் போட்டி

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூலை, 29​- நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் மேல்நிலைப்பள்ளியில் 4வது சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் போட்டி ஆகஸ்டு 1ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் கே.மோகனா நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் பள்ளி சார்பில் கடந்த பல ஆண்டுகளாக செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது 4வது மாடர்ன் பள்ளி சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் சாம்பியன்ஷிப்பை ஏற்று நடத்துகிறோம். தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் ஒப்புதலோடு நடத்தும் இப்போட்டி மாடர்ன் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும், சாம்பியன் கோப்பையும் வழங்கப்படும். முதல் 6 இடங்களை பிடிப்பவர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும். ஏறக்குறைய ரொக்கப்பரிசாக மட்டுமே ரூ.1 லட்சம் தரப்படுகிறது.

இந்தியா முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இந்த போட்டியில் வளைகுடாநாடுகளில் இருந்தும் வீரர்கள் சிலர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. 14வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் ஆசிய இளைஞர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரியா சேஷாத்ரி, தமிழகத்தைச் சேர்ந்த தேசிய வீரர்கள் ஜி.ஆகாஷ், ஸ்வேதா, பரத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் முதல்வர் மோகனா(9790573838), உடற்கல்வி இயக்குனர் ராமதாஸ்(9840768431) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்விஸ் ரவுண்டு 10சுற்று போட்டிகளாக இவை நடத்தப்படுகிறது. போட்டிக்கு தலைமை ஆர்பிடராக கே.ஆர்.சேஷாத்திரி பணியாற்றுகிறார்.

ஆகஸ்டு 1ம் தேதியன்று பகல் 1 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, காஞ்சிபுரம் மாவட்ட செஸ் சங்க தலைவர் என்.விஜயன், மாடர்ன் பள்ளியின் தலைவர் எஸ்.வீரராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு முதல்வர் மோகனா கூறினார். பேட்டியின் போது போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்