முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தியை காட்டி மிரட்டி சென்னையில் முகமூடி கொள்ளை

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.29 - சென்னையில் கணவன் மனைவியை கட்டிப்போட்டு நகை பணத்துடன் தப்பி ஓடிய கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுப்பிரமணிய நகர் 2​வது தெருவில் கோமதி அப்பார்ட்மெண்ட் என்ற அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில் 11 வீடுகள் உள்ளன. இங்கு தரைத் தளத்தில் வசித்து வருபவர் ரமணன் (40). இவர் தி.நகரில் உள்ள ஷேர் மார்க்கெட் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லோகநாயகி. இவர்களுக்கு மணிகண்டன் (16), என்ற மகனும், புவனேஸ்வரி (10) என்ற மகளும் உள்ளனர்.  

நேற்று ரமணன் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். வாசல் கதவை உள்ளே nullட்டி இருந்தனர். ஜன்னல் மட்டும் திறந்து கிடந்தது. நேற்று அதிகாலை 2.45 மணிக்கு 3 கொள்ளையர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். 

பனியன், லுங்கியுடன் இருந்த அவர்கள் கையில் கத்தி வைத்திருந்தனர். 3 பேரும் ஜன்னல் வழியாக கையை விட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர். கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்ததை கண்டு ரமணன் அதிர்ச்சி அடைந்தார். உடனே கொள்ளையர்கள் சத்தம் போட்டால் அனைவரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் பயந்து நடுங்கிய ரமணனின் மனைவி லோகநாயகி தான் அணிந்திருந்த 20 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். வீட்டில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.  இதையடுத்து கொள்ளையர்கள் ரமணனையும் லோகநாயகியையும் துணியால் கட்டி போட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பீரோ சாவியை வாங்கிக் கொண்டனர்.

பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். வந்த சில நிமிடங்களில் வந்த வேலையை முடித்து விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து அசோக் நகர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தென் சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், துணை கமிஷனர்கள் அசோக்குமார், செந்தில்வேலன், உதவி கமிஷனர் குருசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. கொள்ளை பற்றி தகவல் கிடைத்ததும் சென்னை முழுவதும் போலீஸ் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அடையாளம் அறிய பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை ரமணனிடம் காட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   கொள்ளை நடந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளதால் அந்த வழியில் கொள்ளையர்கள் தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

கொள்ளை நடந்த அடுக்கு மாடி குடியிருப்பில் புருஷோத்தமன் என்ற காவலாளி 13 வருடமாக வேலை பார்த்து வரும் காவலாளியிடம் விசாரித்தபோது, கொள்ளையர்களை நான் பார்க்கவில்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்