முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர்களுக்கு அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவுரை

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.29 - சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு நலசேவை மையங்களாக செயல்பட வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அடையாறு 24 மணி நேர அவசர பிரசவ கால மருத்துவமனையை மாநகராட்சி ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வின்போது, எத்தனை மகப்பேறு மற்றும் குழந்தை நல சேவை மையங்கள் மற்றும் பிரசவகால மருத்துவமனைகள் உள்ளது என்று விசாரித்தார். மாநகராட்சி ஆணையர் பதிலளிக்கும்போது 93 நலவாழ்வு மையங்கள் மூலம் கர்ப்பகால கவனிப்பு, வேறு கால பின் கவனிப்பு, பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை தடுப்பூசி போடுதல், களப்பணி, குடும்ப நல முறைகள், கருப்பைவாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் நலக்கல்வி ஆகிய நலப்பணிகள் செயல்படுகிறது என்றும், பத்து இடங்களில் உள்ள 24 மணிநேர அவசர கால பிரசவ மருத்துவமனையில் நலவாழ்வு மையங்களின் பணி மற்றும் சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

அமைச்சர், அடையாறு மருத்துவமனையில் சமீபத்தில் பிரசவித்து பேறு கால பின் கவனிப்பிற்காக வந்திருந்த தாயாரிடம் இம்மருத்துவமனையின் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். தாய் சேய் நல கவனிப்பு அட்டையின் மூலம் வழங்கப்படும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். பின்பு அமைச்சர் மருத்துவர்களிடம் தெரிவிக்கும்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மகளிர் நலனில் அதிக அக்கறை எடுத்து பல்வேறு திட்டங்களை பெண்களின் நலனுக்காக அளித்துவரும் இவ்வேளையில் மருத்துவர்கள் தாய் சேய் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு எவ்வித புகாரும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றார்.

அவர் ஸ்கேன் மற்றும் கருப்பைவாய் பரிசோதனை கருவி அமைந்துள்ள மருத்துவர் அறையை பார்வையிட்டார். பின்பு குளிரூட்டப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசவ அறையை கவனித்தார். அங்கு பிராணவாயு வசதி, கருவில் குழந்தையின் நிலையை கண்டறியும் கருவி (சி.டி.ஜி.) பிறந்த குழந்தைக்கு கதகதப்பை ஏற்றும் இயந்திரம் ஆகியவற்றின் நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்பு மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளையும் குறிப்பாக காட்சியை பிரதிபலிக்கும் லேப்ரோஸ்கேப் கருவி கூடிய அறுவை அரங்கை பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி தான் அதிகமான அளவில் லேப்ரோஸ்கேப் குடும்ப நல அறுவை சிகிச்சை நடைபெறுவதாக குடும்ப நல மருத்துவர் தெரிவித்தார்.

பேறுகால பின் கவனிப்பு அறை மற்றும் பிறந்த குழந்தைகளின் தீவிர கவனிப்பு அறையையும் பார்வையிட்டார். அவர் இந்த பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு கவனிப்பு எல்லா மாநகராட்சி பிரசவ மருத்துவமனைகளிலும் இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

அமைச்சர், சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் ஆகும் பிரசவம் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை பற்றி விசாரித்தார். ஒவ்வொரு வருடமும் 18000 பிரசவங்களும், 14000 கருத்தடை அறுவை சிகிச்சையும் நடைபெறுவதாக மாவட்ட குடும்ப நல மருத்துவ அலுவலர் கூறினார். அவர் சிசு இறப்பு பற்றி விசாரித்தார். போன வருடம் ஆன 18,000 பிரசவங்களில் 22 சிசு இறப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் கூறினார்.

மேலும் அமைச்சர் சிசு இறப்பை குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறினார். அப்போது மாவட்ட குடும்ப நல மருத்துவ அலுவலர் போதிய அளவு அறுவை சிகிச்சை, மயக்க மருந்து மற்றும் குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள் மாநகராட்சியில் புதிய பணி நியமனம் செய்ய வேண்டி கேட்டுக்கொண்டார். அமைச்சர் மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனடியாக பூர்த்திசெய்ய தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அவர் மாவட்ட குடும்ப நல மருத்துவ அலுவலரை வேண்டிய உபகரணங்கள் மற்றும் தேவைப்படும் வசதிகளை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் இம்மருத்துவமனையில் பராமரிப்பு மற்றும் நல சேவைகளை  இன்னும் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கி நம்மை தேடி வரும் ஏழை எளியவர்களுக்கு தொண்டு செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல அலுவலர் மரு.பானுமதி, மரு.சாருமதி மற்றும் மாநகர சுகாதார அலுவலர் மரு.பெ.குகானந்தம், மாநகர கூடுதல் சுகாதார அலுவலர் மரு.தங்கராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்