முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது- ஜெயலலிதா கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 30 - வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள ``மதகலவர தடுப்பு சட்ட மசோதா'' மாநில அரசின் அதிகாரங்களை பறக்கும் வகையில் உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இந்த மசோதாவுக்கு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்டமுன்வடிவை தாக்கல் செய்ய இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் இதற்கான என்னுடைய உறுதியான எதிர்ப்பை முதலிலேயே தெரிவிக்க விரும்புகிறேன்.  மக்கள் நலனுக்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதான எண்ணத்தைத் தோற்றுவிக்க முயன்றாலும், இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கம் தெளிவில்லாமலும், ஊகங்களுக்கு இடமளிக்கும் வகையிலும் உள்ளது.  மேலோட்டமாக பார்க்கும் போதே, இதில் எழுத்தில் உள்ளதை விட அதிக பொருள் பொதிந்து உள்ளது தெரிய வரும்.   இந்தச் சட்டமுன்வடிவில் தெரிவித்துள்ள நோக்கங்களை அடைவதற்கான முறைகளில் இது மிகவும் வழுவுள்ளதாக அமைந்துள்ளது.  உரத்து சொல்லப்படுகின்ற மதக் கொள்கைகளுக்கு இங்கு இடமில்லை என்பதையும், மதச் சார்பற்ற, பல்வேறு மதங்கள் பின்பற்றப்பட்டு, பல்வேறு மொழிகள் பேசப்படுகின்ற இந்தியத் திருநாட்டில், வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறைக்கு இடமில்லை என்பதையும்,  சமாதானத்தை விரும்புகின்ற மற்றும் மதச் சார்பற்ற இந்தியக் குடிமக்கள் ஒப்புக் கொள்வார்கள்.  இந்த உத்தேச சட்டமுன்வடிவு, அதன் நோக்கத்தை எள்ளளவும் அடையாது.  மாறாக, பல்வேறு அமைப்புகளிடையே இது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதுடன், குறை கூறுகின்ற மற்றும் வெளிப்படையாக பேசுகின்ற குழுக்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளையும், தங்களது ஏமாற்றங்களை பலவீனமான நபர்கள் மீது காண்பிக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தையும், அதிகாரம் படைத்தவர்களுக்கு அளித்து விடும். சுருங்கக் கூறின், வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறையைத் தடுக்க உள்ள இந்த மருந்து, நோயைக் காட்டிலும் மோசமானதாகும். உத்தேச சட்ட முன்வடிவின் பிரிவு 3​ல்,  ஒரு குழுவிற்கு எதிரான விரோதமான சூழ்நிலை என்பதைப் பற்றி விளக்கும் போது, ஒருவரது அடிப்படை உரிமையைப் பறித்துக் கொள்வது அல்லது பறித்துக் கொள்வதாக மிரட்டுவது என்று விளக்கி உள்ளது.  இதுவன்றி, வேறு எந்த நடவடிக்கை, இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படக் கூடியவையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அச்சுறுத்திப் பணிய வைத்தல், விரோதமான அல்லது எதிரான சூழ்நிலையை உருவாக்கும் எண்ணம் அல்லது அதனை ஏற்படுத்துவதான நிலை ஆகியவற்றை நோக்கமாகவோ, விளைவாகவோ இருப்பவையையும் இதன் கீழ் கொண்டு வந்துள்ளது.  பறித்துக் கொள்வதாக மிரட்டுவது மற்றும் விரோதமான அல்லது எதிரான சூழ்நிலையை ஏற்படுத்துவதான நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய விளக்கங்கள், ஒவ்வொருவரும் தனது மனதில் பட்டவாறான தெளிவுரைகளை வழங்கிட இயலும்.   ஒவ்வொருவரின் தனிப்பட்ட முறையிலான தெளிவுரைகள் தவறான பயன்பாட்டுக்கு வழி வகை செய்யும் என்பதால்,  எந்த ஒரு சட்டமும் முழுமையாக வெளிப் பொருள்களை மையமாகக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
இந்த உத்தேச சட்டமுன்வடிவு, வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறையின் கீழ் வரும் குற்றங்களை பிரிவுகள் 7 முதல் 12 வரை பட்டியல் இட்டுள்ளது.  பிரிவு 8 வன்மப்  பிரச்சாரம் என்பதை விளக்கி, மேலும், பகையைத் தூண்டுவது அல்லது வளர்ப்பது ஆகிய குறிக்கோளைக் கொண்டுள்ளதாக சாதாரணமாகக் கருதக் கூடிய வகையில் எந்தத்  தகவலையும், எவர் ஒருவரும் பரவச் செய்தாலும் அல்லது பரப்பினாலும், எந்த விளம்பரம் அல்லது அறிவிக்கையை பதிப்பித்தாலும்,  காண்பித்தாலும் . என்று கூறுகிறது.  சாதாரணமாகக் கருதக்கூடிய வகையில் என்னும் சொற்றொடர் மனதில் பட்டவாறு விளக்கமளிக்கக் கூடியதாகும்.  எனவே, அதிகாரத்தில் உள்ளவர்களின் தூண்டுதலால் இதை தவறாகப் பயன்படுத்த ஏதுவாகும்.
இந்த உத்தேச சட்டமுன்வடிவின் பிரிவு 13​ல் கடமை தவறுதல் என்பதன் மூலக்கூறு என்ன என்பதை வரையறை செய்யும்போது, வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறையை தடுக்கும் வகையில் பொது அமைதியை பராமரிப்பதும் பொது ஊழியரின் கடமை என்றும், வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறைகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த தகவல்களை பெற்று, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காததும் கடமையிலிருந்து தவறுதல் தான் என்று பிரிவு 18​ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை தொடர்புபடுத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது.  ஏனெனில், களப் பணியாற்றும் அதிகாரிகள் இந்தப் பிரிவின் கீழ் குற்றம் புரியவில்லை என்றாலும், உயர் அதிகாரிகள் தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மீது இந்தப் பிரிவின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாம்.  இது போன்ற நெகிழும் தன்மையுடைய விளக்கத்தின் அடிப்படையில் வகுப்புவாரி இணக்கம், நியாயம் மற்றும் இழப்பீட்டுக்கான தேசிய அதிகார அமைப்பு தானாகவே நடவடிக்கை எடுக்கலாம் என்கிறபோது இதனுடைய ஆபத்து இரட்டிப்பாகிறது.  இந்த உத்தேச சட்டமுன்வடிவின் 14​வது பிரிவு, கட்டளை இடக்கூடிய, கட்டுப்பாடு அல்லது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொது ஊழியர்கள், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் இந்தச் சட்டம் அல்லது அமலில் உள்ள எந்தச் சட்டத்தின் கீழும் செய்ததாகக் கூறப்படும் தவறுகளுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.  ஆணையிடக்கூடிய பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றாலும், வெளிப் பொருள்களை மையமாகக் கொண்டு, தெளிவாகக் குறிப்பிடப்படாத பட்சத்தில், உயர் அதிகாரியை குற்றம் சாட்டுவது பொருத்தமாக இருக்காது. இந்த உத்தேச சட்டமுன்வடிவின் 20​வது பிரிவு மாநில சுயாட்சியை நேரடியாக தாக்கக் கூடியதாக உள்ளது.  இந்தப் பிரிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எண்ணத்திற்கும், மாநிலங்களுக்கு அதிக அளவில் சுயாட்சி கொடுக்க வேண்டும் என்ற சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட இதர ஆணையங்களின் பரிந்துரைகளுக்கும் எதிரானது.  திட்டமிட்ட வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வு என்பது அரசமைப்புச் சட்டம் 355​வது பிரிவில் குறிப்பிட்டுள்ள உள்நாட்டுக் குழப்பம் என்ற பொருளுக்கு உட்பட்டது என்று இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளதால், தலைக்கு மேல் கத்தி போல், எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்ச உணர்வை மாநில அரசுகளுக்கு இது ஏற்படுத்தும். இந்தப் பிரிவு, குறிப்பாக மத்திய அரசு மட்டுமே திட்டமிட்ட வகுப்புவாரி மற்றும் வன்முறைகள் குறித்து கவலைப்படுவது போன்றும், மாநில அரசுகள் இத்தகைய குற்றங்களுக்கு துணை போவது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  மாநில அரசு மற்றும் அதன் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் பணிகளில் குறுக்கிடும் வகையில் வகுப்புவாரி இணக்கம், நியாயம் மற்றும் இழப்பீட்டுக்கான தேசிய அதிகார அமைப்பிற்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்தப் பிரிவின்படி, வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வு அல்லது நிகழ்வதற்குரிய சாத்தியக்கூறு குறித்து தானாகவோ அல்லது கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையிலோ அல்லது வேறு விதமாகவோ  விசாரிக்கும் அல்லது புலன் விசாரணை செய்யும் அதிகாரம் வகுப்புவாரி இணக்கம், நியாயம் மற்றும் இழப்பீட்டுக்கான தேசிய அதிகார அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசையே நடத்திச் செல்லும் அளவுக்கு, புலன் விசாரணை, புகார்கள் மீதான விசாரணை போன்றவற்றில் விஞ்சிய அதிகாரம் மற்றும் செயல் திறன் இந்த தேசிய அதிகார அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த உத்தேச சட்டமுன்வடிவின் 20​வது பிரிவில் குறிப்பிடப்பட்டு உள்ள திட்டமிட்ட வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை குறித்து மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள், தேசிய அதிகார அமைப்பிற்கு உள்ள அதிகாரம் மற்றும் செயல்பாடுகள், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களை முழுவதும் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானதாகவும் உள்ளது. மாநில அரசுகளுக்கும், அனைத்து மட்டத்தில் உள்ள பொது ஊழியர்களுக்கும் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்கும் அதிகாரம் இந்த தேசிய அதிகார அமைப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கும், பொது ஊழியர்களுக்கும் இருக்கிறது.  இந்த உத்தேச சட்டமுன்வடிவின் கீழ் உள்ள குற்றங்களுக்கான குற்ற வழக்குகளை தாக்கல் செய்வதற்கான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞரை நியமிக்கும் தனிப்பட்ட அதிகாரம் கூட இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுக்கு இல்லை.  மாநில அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞரை நியமிப்பதற்கு முன், அவ்வாறான நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை வெளியிட்டு,  அதன் மீது பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளைப் பெற வேண்டும் என்று இந்த உத்தேச சட்டமுன்வடிவில் உள்ளது.
இந்த உத்தேச சட்டமுன்வடிவில், அத்தியாயம் 7ல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், நஷ்ட ஈடு, உரிமையை ஈடு செய்தல்,  இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பு ஆகியவை மாநில அரசுக்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் மற்றும் வகுப்புவாரி வன்முறை ஆகிய சூழ்நிலைகளில், மாநில அரசுக்குரிய இயல்பான செயல்களாகும்.  மாநில அரசுக்குரிய இந்த அதிகாரங்களை பறித்துக் கொண்டும், அதிகாரத் தோரணையோடும், மேற்பார்வையிடுபவராகவும் தன்னை மத்திய அரசு கருதிக் கொண்டுள்ளதாக இந்தச் சட்டம் அமைந்து உள்ளது.  அரசு அதிகாரிகள்,  காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமை மற்றும் கலகத்தை ஆதரிக்கும் வகையில் இந்த உத்தேச சட்டமுன்வடிவு அமைந்துள்ளது.   இது, ஒட்டுமொத்த குழப்பம் மற்றும் சட்டத்தின் ஆட்சி இல்லாமை ஆகியவற்றை ஏற்படுத்தி, அதன் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கை முழுவதுமாக நிலை குலையச் செய்து விடும். வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறையைத் தடுக்கும் போர்வையில், மாநில அரசுகளைப் புறந்தள்ளி விட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவித்து, அதன் மூலம் மாநில அரசுகள் எந்த ஒரு அதிகாரமும் இல்லாமலும், மத்திய அரசின் கருணைப் பார்வையில் இருக்கும்படியும் வைத்திருப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சி தான், இந்த வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவு, 2011 ஆகும்.
ஒருவேளை, உச்ச நீnullதிமன்றத்தின் எஸ். ஆர். பொம்மை தீர்ப்புரை​யின் காரணமாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 356-ன் படி, மாநில அரசுகளைக் கலைக்கும் வாய்ப்பு மத்திய அரசுக்கு குறுகி உள்ள காரணத்தால், மாநில அரசுகள் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் எப்போதும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை இது கொண்டுள்ளது போலும்.  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்தச் சட்டத்தின் நோக்கம் குறிப்பிடப்படவில்லை.  இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ள பல குற்றங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மனதில் பட்ட தெளிவுரைகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதாலும், அதிலும் குறிப்பாக, இந்தச் சட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், இதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பாகி விடும்.  வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வுகளில் மாநில அரசுகளை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு மத்திய அரசுக்கே ஒட்டுமொத்த அதிகாரங்களை வழங்குவதாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.  nullநீதியரசர் சர்க்காரியா ஆணையம் மத்திய​மாநில அரசுகளின் உறவுகள் பற்றி கூறப்பட்ட நெறிமுறைகளை இந்தச் சட்ட முன்வடிவு சீர்குலைக்கிறது.  விரோதப் போக்குடைய மத்திய அரசு, எதிர்க் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள மாநிலங்களை அரசமைப்புச் சட்டப் பிரிவு 356​ன்படி கலைக்கும் அதிகாரத்திற்கு nullதிமன்ற தீர்ப்புகளால் தடை ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் தவிர்க்கும் வகையில், புதிய தந்திரமாக இந்தச் சட்ட முன்வடிவு உள்ளதாகத் தோன்றுகிறது.  இந்த உத்தேச சட்டமுன்வடிவு சட்டமாக்கப்பட்டால், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சதித்திட்டம் தீட்டி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்கக் கூடிய நிலை ஏற்படலாம்.   வன்முறையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசானது கருத்து வேறுபாட்டினை அடக்குமுறை மூலம் முடக்குவதான பழிக்கு ஆளாக நேரிடும்.  மாறாக, வன்முறை நிகழ்ந்தால்,  வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வதாகக் கூறி, மெய்மைக் கூறுகளை முற்றிலும் விட்டுவிட்டு, தனது விருப்பங்களையும், கருத்துகளையும் சாந்திருக்கிற பொதுப்படையான சட்டத்தின் பிரிவுகளை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசு கலைக்கப்படக் கூடும். சர்வதேச அரங்கில் வலிமை மிக்க அதிகார நாடாக இந்தியா அங்கீகரிக்கப்படும் இந்தச் சூழ்நிலையில், இது போன்ற நடவடிக்கை தேசத்திற்கு நலன் பயப்பதாக இருக்காது.  இந்தச் சட்டமுன்வடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் ஒவ்வாதது மற்றும் எதிரானது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான பாசிச சட்டமுன்வடிவு  என்பதைத் தவிர வேறல்ல.  இடர்ப்பாடான சூழ்நிலையில் உற்சாகத்தையும், கோட்பாடுகளையும் இழந்த மத்திய அரசு, ஆதாய நோக்கத்துடன் அறிமுகப்படுத்தவுள்ள இந்தச் சட்டமுன்வடிவு முற்றிலும் விரும்பத்தகாத ஒன்றாகும். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இந்தச் சட்ட முன்வடிவினை முழுவதுமாக எதிர்க்க வேண்டியது அவர்தம் புனித கடமையாகும்.  இந்தச் சட்ட முன்வடிவை அறிமுக நிலையிலேயே ஒட்டு மொத்தமாக தூக்கி எறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, கட்சி வித்தியாசமின்றி, நல்லெண்ணம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், சமுதாயத் தலைவர்களும், சிந்தனைவாதிகளும், சுதந்திரமான ஊடகங்களும் மற்றும் இந்த மிகப்பெரிய நாட்டின் குடிமக்களும் இந்தச் சட்ட முன்வடிவில் ஒளிந்து கொண்டிருக்கும் ஆபத்தினை உணர்ந்து, இதற்கு எதிராக தெளிவான முறையில் குரல் எழுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்