முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஆர்.பாலுவால் பாதிப்பு: டோல்வரியை சீராக வசூலிக்காவிட்டால் 18ந் தேதி லாரிகள் வேலை நிறுத்தம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.- 30 - முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவால் டோல் வரி பிரச்சனையில் லாரி உரிமையாளர்கள் மாட்டிக்கொண்டு தவிப்பதாகவும், நாடு முழுவதும் மத்திய அரசு டோல் வரியை சீராக வசூலிக்காவிட்டால் வரும் 18 ந் தேதி நள்ளிரவு முதல் தென் மாநில லாரிகள் மற்றும் மஹாராஷ்டிராவில் 24 லட்சம் லாரிகள் ஓடாது என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். தென் மாநிலங்கள் மற்றும் மஹாராஷ்டிரா லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சேலத்தில் நேற்று காலை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமை வகித்தார்.கூட்ட முடிவு குறித்து சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது.நாடு முழுவதும் டோல்வரியை சீராக விநியோகிக்க கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற போராட்டத்தின் போது லாரி உரிமையாளர்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி சுங்கவரியை சீராக்குவது, 3 நபர் இன்சூரன்ஸ் 6,800 ல் இருந்து 11,800 ஆக உயர்த்தியதை மீண்டும் 6,800 ஆக குறைப்பது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு வரியை குறைப்பது. டீசல் விலையை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தவில்லை.

தேசிய பர்மிட் லாரிகளுக்கு ஆண்டிற்கு லாரி உரிமையாளர்கள் சார்பில் ரூ.30 ஆயிரம் சுங்க வரியாக செலுத்த தயாராக இருக்கிறோம். இந்த தொகையை வசூலித்தாலே ஆண்டிற்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். பிறகு ஏன் இவர்கள் தனியாரிடம் ரோடு போட சொல்கிறார்கள்.போடாத ரோட்டிற்கு சுங்கம் வசூல் செய்கிறார்கள் என தெரியவில்லை.

இந்த சுங்கம் வசூலிப்பதில் 2 ஜி ஊழலைவிட மிகப்பெரிய அளவிற்கான ஊழல் நடந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ.விசாரிக்க வேண்டும். முன்பு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுதான் இந்த திட்டத்தை அமுல்படுத்தினார். அதன்பின் வந்த அனைத்து அமைச்சர்களும் இதை செயல்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சனையில் டி.ஆர்.பாலுவை லாரி உரிமையாளர்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள். இந்த சுங்க பிரச்சனை விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காணவேண்டும்.

மத்திய அரசு, லாரி உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். அப்படி அமுல்படுத்தாவிட்டால் வரும் 18 ந் தேதி நள்ளிரவு முதல் தென்மாநிலங்களில் இயங்கும் 16 லட்சம் லாரிகளும்,மஹாராஷ்டிராவில் இயங்கும் 8 லட்சம் லாரிகளும் என மொத்தம் 24 லட்சம் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.

சுங்கவரி வசூலிப்பதில் மாநகர எல்லையில் இருந்து 10 கி.மீ.தூரத்திற்கு பிறகுதான் டோல்கேட் அமைக்கவேண்டும்.ஆனால் சேலத்தில் 10 கி.மீ.க்குள் வைத்துள்ளனர். இதே போல் டோல்கேட் அமைந்துள்ள 20 கி.மீ.சுற்றளவிற்கு உள்ள வாகனங்கள் இலவசமாக சென்று வரலாம். ஆனால் இவர்கள் உள்ளூர் வாகனங்களுக்கும் வருகின்றனர். டோல்கேட் தேவையில்லாத இடத்தில் டோல் அமைத்து வசூல் செய்து வருகிறார்.1997 ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி டோல்கேட்டில் சாலை போடப்பட்ட செலவு தொகை முழுவதும் வசூலானதும் அங்கு டோல்கேட் எடுக்கவேண்டும் என்பது விதியாக இருந்தது. ஆனால் 2008 ல் புதிய திருத்தம் செய்து 25 வருடத்திற்கு ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துவிட்டனர்.எனவே மத்திய அரசு ஒப்பந்தத்தை செயல்படுத்தாவிட்டால் உறுதியாக போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி,மஹாராஷ்டிரா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ் கெளலி, பாண்டிச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கேசவன், ஆந்திரா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கோபால்நாயுடு, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் உள்பட பலர் உடனிருந்தனர். ​  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்