முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டி ஆறுமுகம் கைது: பஸ் கண்ணாடிகளை உடைத்து தி.மு.க.வினர் வன்முறை

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சேலம் ஜூலை.- 31 - சேலத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். இதையறிந்த தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுப்பட்டு 10 க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். கடந்த தி.மு.க.ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஈடுப்பட்டதை பத்திரிக்கைகள் வெளியிட்டன. ஆனால் ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருந்தத்தால் போலீசாரால் அவர்களை கைது செய்ய முடியவில்லை.பாதிக்கப்பட்ட பொதுமக்களும் புகார் கொடுக்கமுடியாமல் ஊமையாகவே இருந்தனர்.இந்த நிலையில் கடந்த தேர்தலில் தி.மு.க.ஆட்சி அகற்றபட்டு அ.தி.மு.க.வின் ஆட்சி அமைந்தது.தேர்தல் பிரச்சாரத்தின்போதே தமிழக முதல்வர் ஜெயலலிதா தி.மு.க.வின் ஆட்சியில் நிலம் அபகரிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டவர்களின் நிலம் மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நில மோசடி குறித்தான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் நில அபகரிப்பு மீட்பு பிரிவு என்ற தனிப்பிரிவு போலீசை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்.
இந்த நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவிற்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நில அபகரிப்பு புகார் ஆட்சி அதிகாரித்தில் இருந்த தி.மு.க.வினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர். சேலம் உள்ளிட்ட சில இடங்களில் நிலத்தை மீட்டு உரியவர்களிடமும் ஒப்படைத்துள்ளனர். போலீசாரின் இந்த உண்மையான நடவடிக்கையை கண்டு இந்த தனிப்பிரிவிற்கு தற்போது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது தம்பி மகனும் 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் சுரேஷ்குமார், உறவினர் கவுசிகnullபதி உள்ளிட்ட பலர் மீது ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவேமுன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியல் ரோலர் மில் விற்பனை ஆகிய பிரச்சனைகளில் புகாரின் அடிப்படையில் முதல் குற்றவாளியாக போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் அவர் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார். பின்னர் ஐ கோர்ட் உத்தரவு படி கடந்த 25 ந் தேதி சேலம் மாநகர நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசாரிடம் சரணடைந்தார்.பின்னர் போலீசார் அவரை 3 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தி கடந்த புதன் கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். ஆனால் தினமும் கோர்ட் உத்தரவு படி காலை 8 மணிக்கு மாநகர டவுன் காவல் நிலையத்தின் உள்ளே உள்ள நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசார் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ்(54) என்பவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் தனக்கு சொந்தமான 20,460 சதுர அடி நிலம் சேலம் நிலவாரப்பட்டியில் சுகம் மெட்ரிக் பள்ளி அருகில் இருப்பதாகவும் கடந்த 2007  ஆம் ஆண்டில் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தூண்டுதல் பேரில் அவரது உறவினர் கவுசிக nullபதி பெயருக்கு ரூ.40 லட்சத்திற்கு மிரட்டி பவர் எழுதி வாங்கி நிலத்தை அபகரித்து விட்டதாகவும் கூறி  வீரபாண்டி ஆறுமுகம், அவரது உறவினர் கவுசிக nullபதி, தம்பி மகனும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருமான பாரப்பட்டி சுரேஷ்குமார்,பத்திர எழுத்தார் சுந்தரம், தி.மு.க.பிரமுகர் நாராயணன் மற்றும் சிலர் என 8 பேர் மீது புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர் மணிவாசம் மற்றும் போலீசார் 147(நான்கு பேருக்குமேல் சட்ட விரோதமாக கூடுதல்), 447(அச்சுறுத்துதல்) 506/1(கொலை மிரட்டல் விடுத்தல்)386,மற்றும் 387 உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று காலை 8 மணியளவில் தனது வழக்கறிஞர் மூர்த்தி, உதவியாளர் சேகர் ஆகியோருடன் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த வீரபாண்டி ஆறுமுகம் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே செல்ல கிளம்பும் போது போலீசார் அவரை கைது செய்வதாக அறிவித்தனர். உடனே அவரது வக்கீல் மூர்த்தியும், உதவியாளர் சேகரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.இதையடுத்து இந்த தகவல் தி.மு.க.வினரிடையே பரவியது உடனே அவர்கள் டவுன் காவல் நிலையம் முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது டவுன் காவல் நிலையம் முன்பு பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது மாநகர துணை போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா அங்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் போலீசார் தி.மு.க.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்வதாக அறிவித்தனர்.பின்னர் அவரை வேனில் ஏற்றி மாஜிஸ்திரேட் வீட்டிற்கு அழைத்து செல்ல போலீசார் முயன்றனர்.இதை பார்த்த தி.மு.க.தொண்டர்கள் உடனே போலீஸ் வேன் முன்பு படுத்து திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த உடனே தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர் நன்றாக இருப்பதாக உறுதியளித்ததை அடுத்து சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள சேலம் கோர்ட் எண் 4  மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர்படுத்தினர் .வழக்கை விசாரித்த ஜட்ஜ் ஸ்ரீவித்யா அவரை வரும் 12 ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அப்போது மாஜிஸ்திரேட் வீடு முன்பு குவிந்த தி.மு.க.வினர் போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி  போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை வேனில் ஏற்றி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகளில் தொடர்பு உடைய தலைமறைவாக உள்ள கவுசிக nullபதி, பாரப்பட்டி சுரேஷ்குமார், பத்திர எழுத்தர் சுந்தரம், தி.மு.க.பிரமுகர் நாரயணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்ததும் மாநகரில் சேலம் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், கலெக்டர் அலுவலக ரவுண்டானா, 5 ரோடு, சூரமங்கலம், திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் உள்ளிட்ட இடங்களிலும், மாவட்ட அளவில் சில இடங்களிலும் தி.மு.க.வினர் கூட்டமாக கூடி அப்பகுதியில் கடைகளை அடைக்க சொல்லி ரகளையில் ஈடுப்பட்டனர். சேலம் பெரியார் மேம்பாலத்தில் சென்ற 2 டவுன் அரசு பஸ்களையும், திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்த 2 அரசு புநகர் பேருந்துகளையும், அழகாபுரம் பகுதியில் 2 பஸ்கள், அஸ்தம்பட்டி பகுதியில் 1 பஸ்கள் என மொத்தம் 10 க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். சில இடங்களில் சாலை மறியலிலும் ஈடுப்பட்டனர். இதில் 2 பெண் பயணிகளுக்கு  காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர். மாநகரின் முக்கிய பகுதிகளான பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், ஜங்சன், கலெக்டர் அலுவலகம், 5 தியேட்டர் பகுதி, 5 ரோடு உள்ளிட்ட பகுதி ஙிபலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டனர். மாவட்ட அளவிலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது. வீரபாண்டி ஆறுமுகம் கைதால் மாநகரம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும் அந்த பரபரப்பை உடனடியாக போலீசார் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து மாநகரை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றினர். சேலம் மாநகர் மற்றும் மாவட்டங்களில் நேற்று மாலை வரை ரகளை மற்றும் வன்முறையில ஈடுப்பட்ட தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகர பொருளாளர் அன்வர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்