Idhayam Matrimony

பழங்குடியினர் பட்டியலில் படுகர் இனமக்களை சேர்க்க பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூலை,- 31 - பழங்குடியினர் பட்டியலில் படுகர் இனமக்களை சேர்க்க வேண்டும் என்று  பிரதமர் மன்மோகன்சிங்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த  முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்  நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர்  இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கை  பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.  இந்த பட்டியல் விவகாரம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது.  எனது முந்தைய  ஆட்சிக்காலத்தில் 5.9.2003 அன்று படுகர் இன மக்களின் கலாச்சாரம் மற்றும் மற்ற பொதுமக்களுடன் பழக கூச்சப்படும் அவர்களது தன்மை,  சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஆகியவற்றை விரிவாக குறிப்பிட்டு அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதுகுறித்து மத்திய மலைவாழ்  மக்கள் விவகார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தேன். 1931 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் படுகர் இனமக்கள் பழங்குடி இன பிரிவில் தான் இருந்தனர்.  நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் பிரதிநிதிகள் என்னை சந்தித்து மீண்டும் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும்படி என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
 நீலகிரி மலையில் பலநூற்றாண்டுகளாக படுகர்களும்,தோடர்களும் வாழ்ந்து வருவதை அவர்கள் கொடுத்த ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. படுகர் இன மக்கள்  தங்களுக்குரிய தனி கலாச்சாரத்துடன் வாழும் சிறுபான்மை  இன  மக்களாகும்.  அவர்களது வாய்மொழி இலக்கியம்,  நம்பிக்கை போன்றவை இயற்கையோடு இணைந்தவை.  இவற்றின் அடிப்படையில் பார்த்தால் படுகர் இன  மக்களை பழங்குடி இன பிரிவு பட்டியலில் சேர்ப்பது பொறுத்தமானதாகும்.  எனவே படுகர் இன மக்களை விரைவில் பழங்குடி இன பிரிவு பட்டியலில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.​
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்