முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்துபவர் முதல்வர் ஜெயலலிதா-அ.தி.மு.க. செயற்குழு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை - 31 - இலவச ரேஷன் அரிசி உள்பட மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. செயற்குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்க நிறைவேற்றப்பட்ட அ.தி.மு.க. அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய, மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்தனர்.  நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில், மதிநுட்பத்துடன் சிறப்பான தேர்தல் வியூகம் அமைத்து, தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தி.மு.க.-வின் அராஜகங்களையும், அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் வகையில், மக்களிடத்திலே எடுத்துக்கூறி, ``பண பலம்'', ``படை பலம்'', ``அதிகார பலம்''  ஆகியவற்றை நம்பி தேர்தலைச் சந்தித்த கருணாநிதியின் கொடுங்கோல் குடும்ப தி.மு.க. ஆட்சியை ஒழித்துக்கட்டி மக்களாட்சியை மலரச் செய்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஒரு நாட்டின் ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமானால் அதற்குப் பின்னணியாக விளங்குவது மக்கள்தான். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மூலம், ``பணநாயகம்'' ஒழிந்து ``ஜனநாயகம்'' தழைத்தோங்க மக்கள் வழிவகை செய்துள்ளனர். தி.மு.க.வின் அச்சுறுத்தல்களுக்கு பணியாமல், முதல்வர் மீதும், அ.தி.மு.க.வின் மீதும் நம்பிக்கை வைத்து, கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்ததோடு மட்டுமல்லாமல், அ.தி.மு.க. மிகப் பெரிய தனிப் பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெறச் செய்து, ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கிய அன்பிற்கினிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணிக்கு வாக்களித்த புதுச்சேரி வாக்காளப் பெருமக்களுக்கும், கூட்டணியின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட கட்சியின் செயல் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இச்செயற்குழு தனது மனம் நிறைந்த நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஏழை, எளிய மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதல் கட்டமாக, குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகையை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு, மணப் பெண்ணுக்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் இலவச தங்கம், மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவக் குடும்பத்திற்கான உதவித் தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிப்பு, குழந்தையை பேணிப் பாதுகாக்கும் பொருட்டு, பணிபுரியும் பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுமுறை என தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கென்றே ``சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை'' என்று தனியாக ஒரு துறையை அமைத்து, அதற்காக ஒரு அமைச்சரையும் நியமித்து, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்து குடிகொண்டிருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இச்செயற்குழு தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்