முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடலில் 4 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

ராமேஸ்வரம்,ஜூலை.- 31 - ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று புனித ஸ்தலமான ராமேஸ்வரத்தில் கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள். தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களை நினைத்து பக்தர்கள் வழிபாடும், சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர்.  முன்னோர்களுக்கான பித்ரு பூஜைகளை முடித்து விட்டு ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர். இந்த விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் கூறுகையில், ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார். இந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் நகரில் பாதுகாப்பு பணியில் 700 போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் இருந்து உற்சவர் சிலைகள் ஊர்வலமாக அக்னி தீர்த்த கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு வழக்கமாக நடைபெறும் சடங்குகள் நடைபெற்றன. இதையொட்டி நேற்று ராமேஸ்வரத்தில் பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தது. இதே போல் வேதாரண்யம், பூம்புகார் உட்பட காவிரி கரையோரங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர். வங்கக் கடலோரம் பல்வேறு இடங்களிலும் மக்கள் புனித நீராடினர்.
கடந்த 2004 ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். அவர்களது நினைவாக அவர்களது உறவினர்களும், கடற்கரை பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தினார்கள். ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நேற்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதையயொட்டி கோயில்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, புராட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற தினங்களை மக்கள் புனிதமாக கருதி தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து வருவது தொன்றுதொட்டு நடந்து வரும் ஒரு பழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony