முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.1 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில் 2 ஜி. ஸ்பெக்ட்ரம், தனி தெலுங்கானா, லோக்பால் மசோதா, வெளிநாட்டு கறுப்புப்பணம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் அரசியல் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது 2 ஜி. ஸ்பெக்ட்ரம் பிரச்சனை பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இப்போது மீண்டும் கூட்டப்பட்டுள்ளது. இப்போது கூட்டப்பட்டுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்றுமுதல் செப்டம்பர் 8 ம் தேதிவரை 5 வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதமே கூட்டப்படுவதாக இருந்தது. ஆனால் ஊழலுக்கு எதிரான லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால்  இந்த கூட்டத்தொடர் தாமதமாக இன்று துவங்குகிறது. 

கடந்த கூட்டத்தொடர்களைப் போல் அல்லாமல் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை இம்முறை மிகத் தீவிரமாக கையில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா சி.பி.ஐ. கோர்ட்டில் வாதாடியபோது பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மன்மோகன்சிங், ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

கடந்த மாதம் 13 ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மும்பையில் அடிக்கடி நடைபெறும் இந்த தீவிரவாத தாக்குதல்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சனை கிளப்ப திட்டமிட்டுள்ளன. 

பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து இம்மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சனை கிளப்பலாம் என்றும் தெரிகிறது. 

வெளிநாடுகளில் பல லட்சம் கோடி கறுப்புப்பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்த கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன. 

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி பாகுபாடின்றி போராடி வருகின்றனர். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் பிரச்சனை எழுப்பப்படும் என்று தெரிகிறது. 

கம்பெனிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தீர்க்கமான கோரிக்கை ஒன்றை வைக்க திட்டமிட்டுள்ளன. மேலும் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் இந்த பாராளுமன்ற தொடரில் பிரச்சனை கிளப்பப்படும் என்று தெரிகிறது. 

லோக்பால் மசோதா, மும்பை தொடர்குண்டுவெடிப்பு, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம், நிலம் கையகப்படுத்துதல், மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுப்பு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்