முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் அமைத்த ஐ.டி. பூங்காக்கள் லாயக்கற்றவைகள்

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,ஆக.1 - கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைத்த ஐ.டி. பூங்காக்கள் சிறுவர் பூங்கா அமைப்பதற்குக்கூட லாயக்கற்றவைகளாக உள்ளது என்று ஐ.டி. வளாகங்களை ஆய்வு செய்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம் பாண்டிகோயில் அருகே உள்ள இலந்தைக்குளம்,பல்கலைக்கழகம் எதிரே உள்ள வடபழஞ்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகங்களை நேற்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த வளாகத்திலேயே அதிகாரிகளுடன் நடந்து சென்று சுற்றிப்பார்த்தார். அதுபற்றி அதிகாரிகளிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 7 மாவட்டங்களில் 8 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்கள் முழு வடிவம் பெறாமல் விளம்பரத்திற்காகவும் அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்ததைப்போல பெயரளவில் மட்டுமே தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக உள்ளது. இந்த வளாகங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளை துவங்க முடியாத நிலையில் உள்ளது. மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்கட்டமைப்பு வசதிகளே இன்னும் முடிக்கப்படவில்லை. அந்தநிலையிலேயே இந்த பூங்கா கடந்த தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட ஐ.டி.பூஙகாக்கள் சிறுவர் பூங்காக்கள் அமைப்பதற்குக்கூட லாயக்கற்ற நிலையிலேயே உள்ளது. 

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் ஐ.டி. பூங்காவை மேம்படுத்துவதற்காகவும் இதை சுற்றியுள்ள தி.மு.க. வினரின் நிலங்களை மேம்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எதற்காக இந்த பூங்காக்கள் உருவாக்கப்பட்டது என்பதே யாருக்கும் தெரியவில்லை. பன்னாட்டு தொழில் வணிகத்தை பெருக்க வேண்டிய இந்த பூங்காக்களில் நில ஒதுக்கீட்டை பெற்ற எந்த நிறுவனமும் தங்களது தொழில் நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. இது பொதுமக்களுக்கும் படித்து வேலைக்காக காத்திருக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பெயரளவில் மட்டுமே சில தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒதுக்கீட்டை பெற்று எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதற்கு கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் நிர்ப்பந்தித்த கமிஷன் தொகையே காரணம். கத்தரிக்காய் வியாபாரம் முதல் பெரிய கடை வியாபாரம் வரை தொடங்குபவர்கள் மு.க. அழகிரிக்கு கப்பம் கட்ட வேண்டிய சூழ்நிலை கடந்த ஆட்சியில் இருந்தது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த ஆட்சியாளர்களால் அச்சுறுத்தப்பட்டன. இதனால் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஏதோ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாகக்கூறி கடந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்து இளைய சமுதாயத்தினரை முட்டாளாக்கி உள்ளனர். 

எனவே இதுபற்றியெல்லாம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் இந்த பூங்காக்கள் மேம்படுத்தப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஐ.டி. வளாகங்களில் தங்களது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இளைய சமுதாயத்தினர்களுக்கு பயன்படும் வகையில் ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உலக அளவில் முன்னேறி வரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒரு புரட்சியை உருவாக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி அளிக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இளைய சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மிக விரைவில் சீர்படுத்தப்பட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் துரித முனைப்போடு செயல்படுத்தப்பட்டு உண்மையான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக செயல்படுத்தப்படும். அதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு, எல்காட் நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த், பொதுமேலாளர் எல்.ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே. போஸ், எம். முத்துராமலிங்கம், கே.தமிழரசன், எம்.வி. கருப்பையா, முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவேல், மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் மா.இளங்கோவன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, வருவாய் கோட்டாட்சியர் துரைராஜ், வடக்கு தாசில்தார் அர்ச்சுனன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.எஸ். பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முனியாண்டி, வளர்ச்சி மேலாளர் வி.ஆர்.சம்பத் குமார், கிளை மேலாளர் மதிவாணன் மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி செல்வராஜ், ஆகியோர் சென்றனர். முன்னதாக அமைச்சரை ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, எம்.முருகேசன், மாவட்ட மாணவரணி செயலாளர்கள் எ.ராஜீவ்காந்தி, கே.மாணிக்கம், மாநகர் மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, முன்னாள் பேரவை இணைச்செயலாளர் எம்.என்.கோவிந்தராஜன், இளைஞரணி துணைச்செயலாளர் பரமேஸ்வரன், வட்டச்செயலாளர்கள் கே.எம். கண்ணன், எ.காஜா, எ.முத்துசாமி, எஸ்.போஸ், கே.வி.கே.கண்ணன் மற்றும் ஐயர் பங்களா கருப்பணன் உள்ளிட்ட  பலர் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்