முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அபகரிப்பு: கருணாநிதி - பரிதி இளம்வழுதி மீது புகார்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.2 - வில்லிவாக்கத்தில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்து முறைகேடாக விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மீதும் அவரது பி.ஏ. காகரின் என்பவர் மீதும் அறக்கட்டளை சொத்தை அபகரிக்க உதவியதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும் கட்டடம் கட்ட பினாமியாக இருந்து செயல்பட்ட உதயநிதி ஸ்டாலின் மீதும் தர்மா தோப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.இது பற்றி விபரம் வருமாறு:-

வில்லிவாக்கத்திலுள்ள தர்மா தோப்பு அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.15 கோடி மதிப்பு என்று குறைத்து காட்டி அறக்கட்டளை நிலத்தை ஆண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். அந்த புகார் ஓராண்டு காலம் கிடப்பில் போடப்பட்டு கிடந்தது. இடையில் புகார் அளித்தவர்களை மிரட்டி நிலத்தை அபகரித்தும் வேலையும் நடந்தது.

இது பற்றி அறக்கட்டளை நிர்வாகிகள் முதல்ருக்கும், டிஜிபி ராமானுஜத்திற்கும் புகார் அளித்தனர். பின்பு முறைப்படி நேற்று சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனர் திரிபாதியிடம்  புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

மேற்கண்ட டிரஸ்டின் டிரஸ்டியாக நான் உள்ளேன். சென்னை, வில்லிவாக்கம், பெரம்பூர்-புரசை தாலுக்காவில் அடங்கிய 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் 1875-க்கு முன்பாக அரசாங்கத்தால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தர்மதோப்பு அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட பொது நிலம் ஆகும். டிரஸ்டிகளால் தர்மதோப்பில் சிவன்கோவில், அன்னதானம், மருத்துவசேவை, பசுசேவா, நிழல் தரும் மரங்கள் வளர்த்தல் உள்ளிட்ட பணிகள்  பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தர்மதோப்பு சொத்தின் மீது தனிநபர்களுக்கு போலி பட்டா வழங்கிய பெரம்பூர்-புரசை தாசில்தார்கள் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்து இருந்தோம். அந்த மனு  மீது போலீஸ் விசாரணை முடிந்து வெளிவந்தபோது கமிஷனர் அலுவலக வாசலில் காத்து இருந்த தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதி பி.ஏ.காகரின், வாசு ஆகியோர் சாப்பிட வா போகலாம் என என்னை அழைத்து காரில் ஏற்றி கடத்தி சென்று தாசபிரகாஷ் எம்.சி.டி.எம். பள்ளி எதிரில் உள்ள தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளர் சிட்டிபாபுவின் ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். காகரின் என்பவர் இந்த சொத்தை அபகரிக்க போலி பத்திரங்கள், போலிபட்டா மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துள்ளோம். 3 கோடி ரூபாய் வரை செலவு செய்து விட்டு டிரஸ்ட் கிட்ட சொத்து கொடுத்துட்டு சும்மா போயிடனுமா? வேணும்னா உனக்கு 1 ஷேர் கொடுத்து விடுகிறோம். வேண்டாம்னா இந்த பிரச்சினையை இத்தோடு விட்டுவிடு. இல்லையெனில் உன்னையும் உன் குடும்பத்தில் உள்ளவர்களையும் சாகடித்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

நான் உயிருக்கு பயந்து மேலும் தகவல்கள் சேகரித்தபொழுது பரிதி இளம்வழுதி பி.எ.காகரின் தலைமையில் பரிதி இளம்வழுதி உதவியுடன் இந்த மாபெரும் டிரஸ்ட் நில அபகரிப்பு மோசடி நடந்து உள்ளது தெரியவந்தது.

1875 முதல் தர்ம தோப்பு அறக்கட்டளை பட்டா நெ.19-ல் நாராயணசாமி ரெட்டி அறங்காவலர் என உள்ளது. 1911 முதல் 28.12.2004 வரை சி.நா.முனுசாமி ரெட்டி என்கிற தனி நபர் பெயரில், டிரஸ்ட் என்கிற வார்த்தை மறைக்கப்பட்டு பட்டா நெ.9 என மோசடியாக உள்ளது. 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் பட்டா 19-ல் அடங்கிய தர்மதோப்பு அறக்கட்டளைக்கு சொந்தமானது என 2008-ல் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உதவியுடன் அவருடைய பி.ஏ.காகரின் என்பவர் 2001 என்கிற பட்டாவில் 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் உள்ளது என போலி பட்டா தயாரித்துள்ளார். இந்த பட்டாவை வில்லிவாக்கம் சார்பதிவாளரிடம் காண்பித்து 25.10.2004-ல் ஆவண எண்.3645 ஆப் 2004 ரிலீஸ் ஆவணத்தை 11 பேரின் கூட்டு சதியோடு பத்திரத்தை பதிவு செய்து அதில் சாட்சி கையெழுத்தையும் பரிதி அமைச்சர் பி.ஏ.காகரின் போட்டுள்ளார்.

பதிவு செய்து தோஷி பில்டருக்கு (5கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 790-க்கு) ரூ.5,34,65,790-க்கு 79 கிரவுண்ட் 500 சதுரஅடி நிலத்தையும், யாஷி மதி தோஷிக்கு ரூ.59,12,250-க்கு 8 கிரவுண்ட் 1832 சதுரஅடி நிலத்தையும் டிரஸ்ட் சொத்தை தனியார் சொத்து என விற்றுள்ளனர். தோஷி பில்டர் ஹர்ஷாத் வி தோஷி போலி பட்டாதாரர்  இராமச்சந்திரனிடம் ஒரு பத்திரமும், தன் மனைவி யாஷிமதி தோஷி பெயரில் மற்றொரு பத்திரமும் 47/ஏ-ன் கீழ் அரசுக்கு குறைவு முத்திரைதாள் செலுத்தி டிரஸ்ட் சொத்தை தனியார் சொத்து என பத்திரம் பதிவு செய்துள்ளார். இந்த 2 பத்திரங்களிலும் பரிதி இளம்வழுதி அமைச்சர் பி.ஏ. காரின், தி.மு.க. மாவட்ட பிரதி நிதி சிட்கோ வாசு, தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர்.

200 கோடி மதிப்புள்ள சொத்தை போலி பத்திரம் மூலம் ரூ.5 கோடியே34 லட்சத்து 65 ஆயிரத்து 790-க்கு பரிதி இளம்வழுதி பி.ஏ. காகரினிடம் ஷர்ஷாத் வி.தோஸி வாங்கியுள்ளார். 4.6.2008 தேதியில் ரூ.22 லட்சத்து 37 ஆயிரத்து 935-ஐ காசோலை எண்.150743, செளத் இந்தியன் பேங்க் திருவல்லிக்கேணி பிராஞ்ச், 10.10.2007 தேதியில் ரூ.2,66,010 காசோலை எண்.130380, ரூ.1,50,000 காசோலை எண்.334997 தேதி 2.10.2006 என்பதை தவிர பல செக்குகள் ஆகவும் ரொக்கமாகவும் ரூ.30,98,945-ஐ தோஷிபில்டர் தி.மு.க. அமைச்சர் பி.ஏ. காகரினுக்கு கொடுத்ததாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரிதி இளம்வழுதி, பரிதி இளம்வழுதியின் பி.ஏ. காகரின், சிட்கோ வாசு, சிட்டிபாபு, போலி பட்டாதாரர் இராமச்சந்திரன், ஹர்ஷாத் வி தோஷி ஆகியோர் 47/ஏ-ன் கீழ் அரசுக்கு குறைவு முத்திரைத்தாள் வசூலிக்கும் நடவடிக்கையின் கீழ் உள்ள ஆவண எண்.234/2007 மற்றும் ஆவண எண்.235/2009 ஆகிய  பத்திரத்தை பெரம்பூர்-புரசை தாலுகாவில் கொடுத்து இரண்டே மாதங்களில் எத்திராஜ் தாசில்தார், நாகராஜ் துணை தாசில்தாரிடம் போலி பட்டா பெற்றுள்ளனர்.

கடந்த 10.7.2010-ல் கத்தி, கம்பு, கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் டிரஸ்டின் 7 1/2, ஏக்கரில் 4 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை சாரதி தலைமையில் ரவுடிகளோடு ஆக்கிரமிப்பு செய்து டிரஸ்டிகளையும், பொதுமக்களையும் விரட்டி அடித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பினார்கள். காகரின், சிட்டிபாபு ஆகியோர் தர்மதோப்பு அலுவலகத்திற்கு வந்து இந்த சொத்து தோஷி பில்டர் பினாமி உதயநிதி ஸ்டாலினுக்கு செல்கிறது. நிலத்தை அளக்கும் போதும், காம்பவுண்ட் கட்டும்போதும் புகார் செய்யக்கூடாது என்றம், செய்தால் அவ்வளவு தான் என மிரட்டினார்கள். தினமும் டிரஸ்டிகளின் வீடுகளின் மேல் ரவுடிகள் கல் எறிந்தார்கள். இதனால் உயிருக்கு பயந்து கொண்டு புகார் செய்யவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநதியின் குடும்பத்திற்கு இந்த சொத்து வாங்கப்பட்டுள்ளதா? என்பதை தீர விசாரிக்கவும்.

27.12.2010 தாசில்தார்கள் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்து இருந்தேன். புகாரினை பதிவு செய்யாததால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து அதற்கானபுகாரினை போலீசார் பதிவு செய்யகோரி உத்தரவும் பெற்றேன். உத்தரவு பெற்றும் தி.மு.க. ஆட்சியில் என்னுடைய வழக்கை ஆய்வாளர் சுகன்யா, துணை ஆய்வாளர் சபாபதி ஆகியோர் சரியான புலன் விசாரணை செய்யவில்லை. சரியான விசாரணை செய்திருந்தால் நான் கடத்தலுக்கும், கொலை மிரட்டலுக்கும் ஆளாகி இருக்கமாட்டேன்.

நில மோசடி தொடர்பாக அமைச்சர் பரிதி பி.ஏ. மீது கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் தெரிவித்து அனைத்து டி.வி.ளிலும் ஒளிபரப்பு ஆனது.  மறுநாளே பரிதி இளம் வழுதி தன்னுடைய பி.ஏ. காகரினோடு முன்னாள் முதலமைச்ர் கருணாநிதியை சந்திப்பு நடக்கும்படியான ஒரு போட்டோ செய்தி அனைத்து டி.வியிலும், பத்திரிகைகளிலும் வந்துள்ளது. இதன் அடிப்படையில் அறக்கட்டளை சொத்தை அபகரிக்க முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி உடந்தையாக இருந்துள்ளார் என வெட்டவெளிச்சம் ஆகிய உள்ளது. இதன் மூலம் போலீஸ் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்காதவண்ணம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அமைச்சரின் பி.ஏ.காகரின் ஆகியோர் மிரட்டியும், என்னையும் மிரட்டி உள்ளனர். அமைச்சர் மற்றும் குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்காத வண்ணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரவளித்து உதவி செய்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது. நீதி துறையையும், பத்திரபதிவு துறையையும், வருவாய்துறையையும் ஏமாற்றி போலி பட்டா, போலி பத்திரம், ஆள்மாறாட்டம், லஞ்சம், கொலை மிரட்டல், கடத்தல், முத்திரை தாள் மோசடி என செய்து பொது நல டிரஸ்ட் சொத்தை அபகரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அவரது உதவியாளர் காகரின் இதற்கு உடந்தையாக செயல்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, பக்கபலமாக செயல்பட்ட பினாமி உதயநிதி ஸ்டாலின், போலிபட்டா தயாரிக்க உதவிய அரசு அதிகாரிகள் புவனேஸ்வரன் தாசில்தார், எத்திராஜ், துணை தாசில்தார் நாகராஜ் ஆகியோர் மீதும் மற்றும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீதும் காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், மேலும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அபகரிகப்பட்ட டிரஸ்ட் நிலத்தை மீட்டு தரவேண்டும் என்றும், அரசு மற்றும் தர்மதோப்பு அறக்கட்டளை சார்பாக பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் 15 அடுக்குமாடி மருத்துவமனை கட்டி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும், உயிருக்கும், உடமைக்கும், டிரஸ்டிகளுக்கும், டிரஸ்டுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது புகாரில் ரங்காரெட்டி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்