முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஜன்லால் மறைவுக்கு பார்லியில் இரங்கல் - ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 2- அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லால் மறைவிற்கும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சிலரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தபின் பாராளுமன்றத்தின் இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. பாராளுமன்றத்தின் லோக்சபை நேற்று காலை கூடியதும், அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன்லால் மற்றும் தமா திக்சான், ஸ்ரீபால்சிங் யாதவ், எல்.எஸ்.தூர், சதுர் ஆனந்த் மிஸ்ரா ஆகிய 4  முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சபாநாயகர் மீராகுமார் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். பஜன்லால் சாதாரண மக்களின் தலைவராக இருந்து பல சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளார். ஒரு சிறந்த நிர்வாகியாகவும் அவர் செயல்பட்டார் என்று மீராகுமார், பஜன்லாலுக்கு புகழாரம் சூட்டினார். முன்னதாக சபை நேற்று காலை 11 மணிக்கு கூடியபோது, புதிதாக பதவியேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களை பிரதமர் மன்மோகன்சிங் சபை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தினேஷ் திரிவேதி, சரன்தாஸ் மகந்த் மற்றும் மிலிந்த் தியோரா ஆகியோரை மன்மோகன்சிங் அறிமுகப்படுத்தி வைத்தார். 

அதன்பிறகு மும்பையில் கடந்த மாதம் 13 ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கும், உத்தரபிரதேசம், அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில்  நடந்த ரயில் விபத்துகளில்  பலியானவர்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சபையை நேற்று நாள் முழுவதும் சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். லோக்சபை நாளை (இன்று) வழக்கம்போல் காலை 11 மணிக்கு கூடும் என்றும் மீராகுமார் தெரிவித்தார். இதேபோல ராஜ்ய சபையும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. நேற்றுகாலை ராஜ்யசபை கூடியதும் அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லால், அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு, முன்னாள் மத்திய அமைச்சர் எம்.எஸ்.குருபாதசுவாமி, ஓவியர் எம்.எப்.ஹுசேன், சில முன்னாள் ராஜ்யசபை உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் இரங்கல் குறிப்புகளை சபையின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி வாசித்தார். பிறகு உறுப்பினர்கள் அனைவரும் சிறிதுநேரம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு சபை நண்பகல் 12 மணிவரை  ஒத்திவைக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது மகாராஷ்ட்ர முதல்வர் பிருதிவிராஜ் சவுகான், டாக்டர் கே.பி.ராமலிங்கம் ஆகிய ராஜ்யசபை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதாக சபைத் தலைவர் அன்சாரி அறிவித்தார். பிறகு தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு மத்திய அமைச்சர்களுக்கு அன்சாரி அழைப்பு விடுத்தார். அப்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  நில மேலாண்மை சட்டத்தை உடனடியாக சபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளின் நிலங்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.  எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி சபைத் தலைவர் அன்சாரி கேட்டுக்கொண்டார். ஆனாலும் கூச்சல் குழப்பம் அடங்கவில்லை. இதையடுத்து சபையை நாள் முழுவதுமாக சபாநாயகர்  அன்சாரி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்