முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

சங்கரன்கோவில்,ஆக.2 - ஆடித்தபசு விழா சங்கரன்கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.உலகத்தின் உயிர்களாகிய நாம் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிரிவினை பேசுவதை திருத்தும் பொருட்டு பார்வதி சிவனிடம் தாங்கள் நாராயணமூர்த்தியிடம் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தை காட்டி அருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு சிவன் பார்வதியை நோக்கி பூலோகத்தில் பொதிகை மலைச்சாரலில் சங்கரநயினார் எனும் பதியில் தவம் செய்து நீ விரும்பியபடி காட்சியை காண்பாயாக என அருளினார். அதன்படி ஆடித் திங்கள் உத்திராட நன்னாளில் அருள்தரும் கோமதி அம்பிகைக்கு காட்சி கொடுத்து அருளினார். இதனையே நாம் ஆடித்தபசு என்கிறோம்.  இத்தகைய சிறப்பு மிக்க ஆடித்தபசு திருவிழா நேற்று காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் துதியை திதியும், மக நட்சத்திரமும் கூடிய சுபயோக தினத்தில் திருக்கோயில் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள சிவிகையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த திருவிழா நேற்று முதல் துவங்கி 12 ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 9 ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும், 11 ம் தேதி உச்சக்கட்ட நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் ராஜாமணி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் கோமதியம்மாள் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தந்து வீதியுலா வந்து அருள்பாலிப்பார்கள். கொடியேற்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கம்மவார் நாயுடு சமூகத்தினர் ,துணை ஆணையர் ராஜாமணி மற்றும் பணியாளர்கள் தவமணி, இளங்கோ, நீதிபதிகள் சந்திரசேகர், பாலமுருகன், வழக்கறிஞர்கள் மாதவராம், புஷ்பராஜ், ரவிசங்கர், நகர் மன்ற தலைவி பார்வதி சங்கர், ஒன்றிய தலைவி அன்புமணி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரபிதாரி உத்தரவுப்படி சங்கரன் கோவில் டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் போலீசார் சிறப்பாக செய்து இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்