முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேயிலைக்கு ரூ.2 மானியம்: விவசாயிகள் கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, ஆக.2 - பச்சைத் தேயிலைக்கு கிலோவிற்கு ரூ.2 மானியம் வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சிப் பெருக்கில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது தேயிலையாகும். தேயிலை விவசாயத்தை நம்பி 60 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். கடந்த அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் பச்சைத் தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்ட போது, சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு தேயிலை நிறுவனம் மூலம் தேயிலையை வாங்கி ஊட்டி டீ என்ற பெயரில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விற்பனை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதனைத்தொடர்ந்து தேயிலை ஏலத்தில் புரோக்கர்கள் தலையீட்டை தடுக்கும் வகையிலும், சிறு தேயிலை விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலைக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2005ம் ஆண்டு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்யும் வகையில் நாட்டிலேயே முதலாவது மின்னணு ஏலமையத்தை குன்னூரில் துவக்கினார். இதன் மூலம் தேயிலை தூள் நல்ல விலைக்கு விற்றதினால், விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலைக்கும் நல்ல விலை கிடைத்தது. மேலும் விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலைக்கு கிலோவிற்கு ரூ.2 வீதம் மானியமும் வழங்கினார். அதனைத்தொடர்ந்து வந்த தி.மு.க.,ஆட்சியில் சிறு தேயிலை விவசாயிகளுக்கு எந்த வித மானியமும் தரவும் இல்லை, தர முன்வரவும் இல்லை. தொடர்ந்து தேயிலை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன் தேயிலை விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதியின்படி தற்போது தற்போது தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் நீலகிரி மாவட்டத்தில் தேயிலையை நம்பி வாழும் சிறு, குறு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் இயங்கி வரும் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள 22 ஆயிரம் உறுப்பினர்களுக்கும் பச்சைத் தேயிலைக்கு தற்போது வழங்கப்படும் விலையான கிலோவிற்கு ரூ.6 என்பதற்கு பதிலாக, தனியார் தொழிற்சாலையில் வழங்கப்படும் கிலோ ரூ.8 க்கு ஈடாக விலைகிடைக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரையுள்ள காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்ததுடன், இதற்காக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ.11 கோடியே 20 லட்சத்தையும் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.2 மானியமாக மீண்டும் அ.தி.மு.க.,ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.    

பச்சைத் தேயிலைக்கு மானியம் தருவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ள செய்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. அதனைதொடர்ந்து இச்செய்தியைக் கேட்ட நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, அரவேனு, மஞ்சூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஊட்டியில் அ.தி.மு.க.நகர செயலாளர் டி.கே.தேவராஜ்,பாசறை மாவட்ட செயலாளர்  வினோத் மற்றும் விவசாயிகள் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது குறித்து தேவராஜ், வினோத் ஆகியோர் தெரிவிக்கையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு போதுமான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பசுந்தேயிலைக்கு கடந்த ஜூன் மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாத காலத்திற்கு கிலோவிற்கு ரூ.2 வீதம் மானியம் அறிவித்துள்ளது எல்லையில்லா மகிழ்ச்சியாக உள்ளது. நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மானியம் தந்த மகராசி அம்மா அவர்களுக்கு நீலகிரி விவசாயிகளின் சார்பில் கோடானுகோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்