முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கள கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம்,ஆக. 2- ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று விட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்கள கடற்படையினர் விரைந்து வந்து தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த மீன்களையும், மீன்பிடி கருவிகளையும் பறித்து சென்றனர். இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் பாதியிலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் 600 க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கள கடற்படையினர் 4 குட்டி ரோந்து கப்பலில் வந்து ராமேஸ்வரம் மீனவர்களை இங்கிருந்து உடனடியாக செல்லும்படி எச்சரித்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் தங்களது வலைகளை எடுத்து கொண்டு புறப்பட தயாரானார்கள்.  அப்போது ராமேஸ்வரம் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான படகை சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்து படகில் இருந்த செல்லத்துரை, குமார், ஆறுமுகம், பரம்பரை, அரசுபாண்டி ஆகிய 5 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். இதனை பார்த்த மற்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 5 மீனவர்களும் இலங்கை தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களா? அல்லது விடுதலை செய்யப்படுவார்களா என்பது தெரியவில்லை. இது குறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கூறும் போது, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விரட்டியடித்து வருகின்றனர். நாங்கள் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருக்கும் விலை உயர்ந்த மீன்களையும் பறித்து சென்று விடுகின்றனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலில் சென்று மீன் பிடிக்க அச்சமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று விட்டனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்