முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயிலில் தேரோட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி,ஆக. 2 - ஸ்ரீவில்லி ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு கோலாகலமாக நடைபெறுகிறது. விழாவில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் 108 வைணவ தலங்களில் முக்கியமானதாகும். இங்கு அவதரித்த ஆண்டாள் பகவான் கண்ணனை மனமுருக எண்ணி அவனையே கைத்தலம் பற்றி ஐக்கியமான சிறப்புடைய ஸ்ரீவில்லி. மாநகரில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் அவதரித்த தினமான பூரத்தன்று ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மிகப் பெரிய தேரில் அமர்ந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த திருத்தேரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்து நிலை சேர்க்கும் காட்சி காண்போரை பரவசப்படுத்தும். 

ஸ்ரீவில்லி. ஆண்டாள் தேர் திருவிழாவை காண ஏராளமான வெளிமாநில பக்தர்களும் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் முக்கிய நிகழ்ச்சியான 5 கருட சேவை கடந்த 29 ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆடிப் பூரத் தேர்த்திருவிழா இன்று காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் தமிழக அமைச்சர்கள் சண்முகநாதன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள், அரசு அறநிலையத் துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். மேலும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தேர் இழுக்க நைலான் கயிறு வடங்கள் சுமார் ரூ. 4 லட்சம் செலவில் வாங்கப்பட்டு தேரில் இணைக்கப்பட்டுள்ளது. 

தேர்த் திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்காரம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக குடிநீர், மருத்துவம் மற்றும் சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு கோயிலின் முன்பு பிரம்மாண்ட அரங்கில் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் மற்றும் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லி. டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்