முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை திசை திருப்ப தி.மு.க. போராட்டம்: சரத்குமார்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.2 - நில மோசடி வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக மக்களை திசை திருப்ப தி.மு.க. போராட்டம் நடத்துவதா? என்று சரத்குமார் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சமச்சீர் கல்வியை தமிழ்நாட்டில் கொண்டுவருதை பெரும்பாலோர் வரவேற்ற போதிலும் கடந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்கல்வி கொண்டுவர திட்டங்கள் தீட்டப்பட்டபோது சமச்சீர் கல்வி வேண்டும், வேண்டாம் என்ற இருவேறு கருத்துக்கள் நிலவின.

சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் முன்பு அனைத்துப் பள்ளிகளின் பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பள்ளியின் கட்டமைப்பு வசதி, அடிப்படை தேவைகள், போதுமான ஆசிரியர்கள் என அனைத்து பள்ளிகளையும் அதாவது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும் சமச்சீர் கல்வி பாடங்கள் மாணவர்களின் உயர் கல்விக்கேற்ப தரமானதாக அமைந்திட வேண்டுமென்றும் தெரிவித்தோம். சமச்சீர்கல்வி பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால உயர்கல்விக்கு ஏற்ப தரமானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காகத் தான் முதல்வர் ஜெயலலிதா ஒரு புதிய குழு அமைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஏதோ கடந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்த திட்டங்களை அமல்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுவதாக புரிந்துகொண்டு சமச்சீர்கல்வி அமல்படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமச்சீர்கல்வி பிரச்சினையை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளி மாணவர்களை கூட போராட்டத்தில் ஈடுபட தூண்டி விடுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும், இது குறித்த வழக்கில் உரிய தீர்ப்பு கிடைக்கும் வரைகூட அவர்களால் காத்திருக்க முடியவில்லை. நில அபகரிப்பு மோசடிகளில் தவறு செய்தவர்கள் தண்டனை பெற்றே தீரவேண்டும், பாரபட்சமின்றி, கட்சிபேதமின்றி மோசடி செய்தவர்கள் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தவறு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் தி.மு.க.வினர் முக்கிய நிர்வாகிகள். இவர்கள் நடத்திய நில மோசடிகளை அறிந்து மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.

இத்தகைய நில மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்தும் தி.மு.க.விற்கு ஏற்பட்டுள்ள நிரந்தரக் களங்கத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும்,  மக்களை திசை திருப்புவதற்காகவும், சமச்சீர் கல்வி, பொய்வழக்குகள் என்று போராட்டத்தை தி.மு.க.வினர் நடத்துகிறார்கள்.

ஈழதமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டபோதும் உலகின் முக்கிய நாடுகள் அனைத்தும் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளி என்று தெரிவித்தபோதும் கூட வேடிக்கை பார்த்தவர்கள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள். பள்ளிக்குழந்தைகளின் கல்வியோடு விளையாடி, சமச்சீர்கல்வி பிரச்சினையை வெறும் அரசியலாக்க வேண்டாம். உரிய நடவடிககைகளை உரிய நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா எடுப்பார் என்பது உறுதி.இவ்வாறு சரத்குமார் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்