முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு - மகாராஷ்டிரா இடையே கூட்டு மின்சார திட்டம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு- மகாராஷ்டிரா கூட்டு மின்சார திட்டத்திற்காக லேன்கோ நிறுவனத்திற்கு அனுமதி கடிதத்தை வழங்கினார். முதல்வர் ஜெயலலிதா தன்னிறைவு பெறும் வகையில் தமிழகத்தில் மின்சார உற்பத்தியை பெருக்க பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகளை துவக்கவும், விவசாய உற்பத்தியை பெருக்கவும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தடையற்ற மின்சார வினியோகத்தை வழங்குவதே நோக்கமாகும். 

மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காரே பால்மே-2 நிலக்கரி பிளாக்கிலிருந்து தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி மேம்பாடு மற்றும் பகிர்வுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்திலிருந்து உற்பத்தி செய்து தமிழ்நாடு உற்பத்தி மற்றும் வினியோக கழகத்திற்கு (டேன்ஜெட்கோ) 592 மில்லியன் டன்னாகவும், மகாராஷ்டிரா நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு 176 மில்லியன் டன்னாகவும் வழங்கப்படுகிறது. 

மேலே குறிப்பிட்ட நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்த `மகா- தமிழ் கொல்லைரீஸ் லிட்' என்ற கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்த நாக்பூரிலுள்ள மினரல் எக்ஸ்புளரேஷன் கார்ப்பரேஷன் லிட், (மத்திய பொதுத்துறை நிறுவனம்) உடன்  மகா-தமிழ் கூட்டு நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. 

காரே பால்மே-2 நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டு வருவதற்கு பெரும் செலவு ஆகும் என்பதால் நிலக்கரியை ஆங்காங்கே பிரித்தெடுப்பதற்கும்,  அந்த இடத்திலேயே  அனல் மின்நிலையம் உருவாக்கவும் டென்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக லேன்கோ இன்ப்ராடெக் நிறுவனத்தை மகா- தமிழ் கொல்லைரீஸ் லிட். தேர்வு செய்துள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் லேன்கோ இன்ப்ரா டெக் லிட். நிறுவனத்தின் துணை தலைவர் ஜி.பாஸ்கர் ராவிடம் அளித்தார். 

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-

மின்சார உற்பத்திக்கான திட்டத்திற்காக லேன்கோ நிறுவனத்திற்கு  அனுமதி கடிதம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஏற்பாட்டின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் யூனிட்டுக்கு ரூ.1.99 விலையில் 630 மெகாவாட் மின்சாரம் பெறும். மகாராஷ்டிரா மாநில சுரங்க நிறுவனம் உற்பத்தியாகும் நிலக்கரியில் 23 சதவீதம் பெறும். லேன்கோ நிறுவனம் 639 மெகாவாட் மின்சாரத்தை வணிக விற்பனைக்காக பெறும். இது இந்த திட்டத்தை மேம்படுத்தும் நிறுவனமாகும். 

எனது அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 23,140 மெகாவாட் ஆக மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மின் திட்டம் மூலம் 15,140 மெகாவாட் மின்சாரமும், காற்றாலை மின்திட்டம் மூலம் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும், சூரிய ஒளியில் மின்திட்டம் மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

மேற்படி 3 வகையான மின்திட்டத்துக்கு  தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனது அரசு இந்த திட்டங்களுக்காக தக்க சூழ்நிலையை உருவாக்கும்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்