முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டியில் முறைகேடுகள் நடக்கவில்லையாம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.5 - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்று முதல்வர் ஷீலாதீட்சித் கூறியுள்ளார். கடந்த 2010 ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றன. இதில் சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு படிகங்லு தலைமையிலான குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். மாநில அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளது. 

ஒரு மின் விளக்கு ரூ. 5 ஆயிரத்துக்கு வாங்கி ரூ. 25 ஆயிரத்துக்கு வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக அரசுக்கு ரூ. 31 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் டெல்லியில் மின்சார விளக்குகள் நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், காமன்வெல்த் போட்டியில் எந்தவித முறைகேடுகளும் ஏற்படவில்லை என்றார். 

காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற பொறுப்பு டெல்லி அரசிடம் வழங்கப்பட்டது. அதை நாங்கள் செய்து முடித்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். தணிக்கை குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இது குறித்து கருத்து தெரிவிப்பேன் என்றும் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்று பொதுக் கணக்கு குழுதான் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் தரமற்ற மின்சார நிறுவனத்துக்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை டெல்லி தலைமை செயலர் திரிபாதி மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தணிக்கை குழு அறிக்கை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படாத முன்பு இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது தவறு. தரமற்றதாக குறிப்பிடும் நிறுவனத்தை டெல்லி அரசு அப்போதே நீக்கம் செய்து விட்டது. அந்த நிறுவனம் ஐகோர்ட்டில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதில் வென்றது. நீதிமன்ற உத்தரவுப்படி அந்த நிறுவனத்துக்கு காண்டிராக்ட் வழங்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்