முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்படும்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நேற்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: அரசு கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும். இக்குறிக்கோளை எட்ட, பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மை புரட்சியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும், 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி குறைவாக உள்ள பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழும் ஏழைக்குடும்பங்களுக்கு ஜெர்சி போன்ற 12,000 கலப்பின கறவை மாடுகள் வழங்கப்படும். இந்த திருத்த வரவு, செலவுத்திட்ட மதிப்பீட்டில், இதற்காக 56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கறவை மாடுகள் வழங்கப்படும் இக்கிராமங்களில் பிற அடிப்படைக் கட்டமைப்புகளான பால் கூட்டுறவு சங்கங்கள், பால் சேகரிப்புத் தடங்கள் ஏற்படுத்தப்படும். இலவச கறவை மாடுகள்  வழங்கும் திட்டத்தில் பயனடைந்த குடும்பங்களைச்சேர்ந்த மகளிரை கொண்டு 4,000 பால் உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்படும்.

மாநிலத்தின் ஒரு நாள் மொத்த பால் உற்பத்தியான 158 இலட்சம் லிட்டரில் ஆவின் நிறுவனம் மூலம்  20 இலட்சம் லிட்டர் பால் மட்டுமே கையாளப்படுகிறது. ஆவின் நிறுவனம், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளை பால்வளம் குறைவாக உள்ள பகுதிகளில் பலப்படுத்துவதன் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமாகும்.

கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்தி பயனாளிகள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்ல கூடுதலாக 155 நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள் ஆவின் நிறுவனத்தால் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ மையம் செயல்படுவது உறுதி செய்யப்படும். ஆவின் நிறுவனம், மேலும 100 கூடுதல் பால் கொள்முதல் மையங்களை 32.50 கோடி ரூபாய் செலவில் நிறுவும். 5 ஆயிரம் லிட்டருக்கு கூடுதலாக கொள்ளளவு திறன் கொண்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் குளிரூட்டும் வசதி, மதிப்பு கூட்டு வசதிகளுடன் நவீனப்படுத்தப்படும். 2011-2012 ஆண்டில், ஆவின் நிறுவனம் மூலம், மேலும் 10 பால் பண்ணைகள் இந்த முறையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்த 2011-2012 ஆம் ஆண்டில் 385 கால்நடை துணை மையங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். விரிவாக்க வசதிகளை வலுப்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 122.24 கோடி ரூபாய் செலவிடப்படும். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலும் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி நடப்பாண்டில் தொடங்கப்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை மையம் ஒன்று ஓசூரில் ஏற்படுத்தப்படும்.

முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இந்த அரசு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நான்கு வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளை இலவசமாக வழங்கும். 2011-2012 ஆம் ஆண்டு, ஒரு இலட்சம் குடும்பங்கள் தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை இத்திட்டத்தின் கீழ் பெற்று பயனடைவர். இந்த திருத்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில், 135 கோடி ரூபாய் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1.5 இலட்சம் குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளின் முடிவில் ஏழு இலட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள். இது ஊரக பகுதிகளிலுள்ள குடும்பங்களில் சுமார் 10 விழுக்காடாகும்.  பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் அன்று ஏழை குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துடன் இந்த திட்டமும் தொடங்கிவைக்கப்படும்.

இந்த அரசு, தீவன உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை தொடங்கும். நடப்பு ஆண்டில் 24 ஆயிரம் ஏக்கரில் குறிப்பிட்ட பசுந்தீவன வளர்ப்பிற்கு மானியம் வழங்கப்படும். நுண்ணீர் பாசனத் திட்டம், தீவனப் வளர்ப்பிற்கும் விரிவுப்படுத்தப்படும். நுண்ணீர், பாசன தெளிப்பான்கள், வேகத்தெளிப்பான்கள் போன்றவற்றை பயன்படுத்த சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். அவற்றோடு, தீவன சேதாரத்தை குறைக்க, 50 விழுக்காடு மானியத்தில் 5 ஆயிரம் புல்வெட்டிகளு, 5 ஆயிரம் நறுக்கும் இயந்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்தகைய பசுந்தீவன உற்பத்தித் திட்ட மானியத்திற்கென, அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago