முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசி கடத்தலை தடுக்க குற்ற தடுப்பு பிரிவு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - அரிசி கடத்தலை தடுக்க குற்ற தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நேற்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பாதுகாப்பை வழங்கும் வகையில் அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தை தமிழ்நாடு பின்பற்றி வருகிறது. இந்த அரசு பதவி ஏற்றவுடன் அரிசி பெற தகுதியான 1.83  கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இலவச அரிசி வழங்கி தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.

முந்தைய அரசால் கலைக்கப்பட்ட ஐந்து எல்லையோர ரோந்துப் படைகள் மீண்டும் புதுப்பிக்கப்படும். எல்லைப்பகுதிகளில் அரிசி கடத்தலை தடுப்பதற்காக, ஒரு புதிய உணவு வழங்கல் குற்றத் தடுப்புப் பிரிவு பொள்ளாச்சியில் ஏற்படுத்தப்படும். இன்றியமையாப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்குவதனால் ஏற்படும் கூடுதல் மானியத்தையும் கணக்கில் கொண்டு 2011-2012 ஆம் ஆண்டிற்கு உணவு மானியத்திற்காக திருத்த வரவு, செலவுத்திட்ட மதிப்பீட்டில் 4,500 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது. 

விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய குறுகியக்கால நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும். இதன் அடிப்படையில் பொது விநியோகத் திட்டத்தை செம்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, மசாலாப் பொட்டலங்கள் ஆகியவற்றைச் சலுகை விலையில் வழங்கும் பொது விநியோக சிறப்புத் திட்டத்தை 31.12.11 வரை இந்த அரசு நீட்டித்துள்ளது. விலை ஏற்றத்தின் போக்கைத் தொடர்ந்து கண்காணித்து, பொருட்களில் நிலையற்ற விலை மாற்றங்கள் ஏற்படும்போது மத்திய அரசின் மூலமாக முன்பேர வர்த்தக ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அத்தகைய பொருட்களை முன்பேர வர்த்தக பட்டியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வோம். இன்றியமையாப் பொருட்களின் விலை அளவுக்கு அதிகமாக உயரும்போது அவற்றை கொள்முதல் செய்து கூட்டுறவு பண்டக சாலைகள் மூலமாக நுகர்வோர்களுக்கு அடக்க விலையில் வழங்குவதற்கு ஏதுவாக 50 கோடி ரூபாய் தொடக்க நிதி இருப்புடன் கூடிய ஒரு விலைக் கட்டுப்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்படவுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்