முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3,000 புதிய பஸ்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.6 - போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 21,169 மாநில போக்குவரத்து கழக பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ் நிறுவனங்களின் இப்போதைய நிதி நிலை மிக மோசமாக உள்ளது. எனவே அன்றாட நிர்வாக செலவுகளுக்கு கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து கழங்களுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தும் வகையில் இப்போது கணிசமாக நிலம் உள்ள பஸ் நிலையங்களில் அரசு தனியார் கூட்டு முயற்சியால் பஸ் நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக 2011 - 12 நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும். இதற்காக இந்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்து கழங்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ. 304 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கவர்னர் உரையில் ஏற்கனவே அறிவித்தவாறு சென்னை நகரில் இப்போதுள்ள பொது போக்குவரத்துடன் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒருங்கிணைத்தல், சென்னையில் பல பகுதிகளை ஒருங்கிணைக்க கூடிய விரிவான மோனோ ரயில் அமைப்பை நிறுவுதல் வாயிலாக ஓர் ஒருங்கிணைந்த பல்முறை நகர போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். மோனோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்