முக்கிய செய்திகள்

ஏர்-இந்தியாவுக்கு விமானம் வாங்கியதில் ரூ.5,000 கோடி ஊழல்...!

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,8 - ஏர்.இந்தியாவுக்கு விமானங்களை வாங்கியத்தில் ரூ 5,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தனிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு மூலம் மற்றொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் செலவினங்கள் குறித்து மத்திய கணக்கு தணிக்கைக்குழு ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவிடப்பட்ட தொகைகள் குறித்து கணக்குகள் வெளியிட்டது. 

அந்த அறிக்கையில், டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டதில் ஏகப்பட்ட அளவுக்கு பணம் விரயம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.4.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே அளவு நீளத்திற்கு ரெயில் பாதை அமைக்க ரூ.4.10 கோடி தான் செலவாகியுள்ளது.  ஒரு மின்விளக்கின் சந்தை விலை ரூ.6,000 என்றும், ஆனால் அதே விளக்குக்கு தலா ரூ20,000 முதல் ரூ.25,000 வரைசெலவிடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆகவே, முதல்வர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்யவேண்டும் என்று பாரதியஜனதா கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக நேற்றுமுன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு, முதல்வர் ஷீலா தீட்சித் பதவி விலகத்தேவையில்லை என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதை, பாரதியஜனதா கட்சி விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் இரட்டை நிலை எடுப்பதாக தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், ஏர் -இந்தியாவுக்கு விமானங்களை வாங்கியது தொடர்பான அறிக்கையையும், மத்திய கணக்கு தணிக்கைக்குழு வெளியிட்டுள்ளது. இதிலும், ரூ.5,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2009 -ம் ஆண்டில் ஏர்- இந்தியா தலைவராக அரவிந்த் ஜாதவ் நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒரு மனுதாக்கல் செய்தார். அதன் மூலம் இந்த விபரம் தெரியவந்தது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முதலாவது ஆட்சியில் 111 விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விவகாரத்தில் ரூ2.100 கோடி இழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் ஏர் -பஸ் விமான கம்பெனியிடம் 21 விலை உயர்ந்த விமானங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

இதற்காக கடன் தொகை பெறப்பட்டது. இதன் மூலம் ரூ.2,775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில விமானங்கள் குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட்டன. குத்தகை காலம் முடிந்த பிறகும் விமானங்கள் திருப்பி செலுத்தப்படவில்லை. ஆகவே இதற்காகவும், ரூ.200 கோடி கூடுதல் நிதி செலவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.5,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசடியாகவும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வருகிறது.

இதனால், மத்திய அரசுக்கு மற்றொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரமும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்: