முக்கிய செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 அதிகரிப்பு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.9 - தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 அதிகரித்தது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு பவுன் விலை ரூ.20 ஆயிரத்தை தொட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது. 1974-ம் ஆண்டு ஒரு பவுன் விலை வெறும் ரூ.250 ஆக மட்டுமே இருந்தது. அந்தாண்டு மே மாதத்தில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயரத்தொடங்கி இன்று ரூ.20 ஆயிரத்து தொடும் அபாய நிலைக்கு வந்துவிட்டது. 

இதற்குகாரணம் தங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள ஆர்வமும் ஆசையும்தான். அடுத்து தங்கத்தில் முதலீடு செய்தால் வருமானம் அதிகம் கிடைப்பதுதான். இதனால் கறுப்புபணம் வைத்திருப்பவர்களும்,பெரும் பணக்காரர்களும், வருமானம் அதிகம் உள்ளவர்களும் தங்கத்தில் முதலீட்டை அதிகரிக்கத் தொடங்கினர். இதனால் தங்கம் விலை கிடு கிடுவென்று உயர்ந்தது. தற்போது சீனாவானது பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. அதனால் அந்த நாடு ஆயிரக்கணக்கான டன் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் பொருளாதாரம் குறைந்துவிட்டது. செலவு அதிகரித்துள்ளது. அதேசமயத்தில் வருவாய் குறைந்துள்ளது. வடவியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா படையெடுத்தது. ஏமன், சூடான், சிரியா ஆகிய நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக தாக்குதலில் இறங்கியது ஆகியவைகளால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் முதலீட்டாளர்களும் பெரிய நிறுவனங்களும் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் தங்கத்தின் விலை கிடு கிடு வென்று வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் ஒரு பவுன் தங்கத்திற்கு ஏறக்குறைய ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. நேற்றுமட்டும் ஒரு பவுனுக்கு ரூ. 600 அதிகரித்து ரூ. 18 ஆயிரத்து 856 ஆனது. முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் தங்க வியாபாரிகளும்,முதலீட்டார்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி தங்கம் விலை உயர்ந்தால் மத்திய-மாநில அரசுகள் தெளிவாக ஆய்வு செய்து விலை ஏற்றத்தை குறைக்க ஏதாவது ஒரு வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: