முக்கிய செய்திகள்

அமெரிக்க நிதி நெருக்கடியை தொடர்ந்து கவனித்து வருகிறோம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக்ஸ்ட்-9 - அமெரிக்காவின் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பன்னாட்டு நிலவரங்களால் இந்தியாவுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. என்றாலும் அமெரிக்காவின் நிதி நெருக்கடியை தொடர்ந்து கவனித்து வருவதாக இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2008 ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உலகம் முழுவதும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. என்றாலும் கூட அந்த பொருளாதார மந்த நிலையை இந்தியா பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் சமாளித்து விட்டது. 

ஆனால் அமெரிக்காவில் எதிர்பார்த்த அளவுக்கு  பொருளாதார மீட்சி எட்டப்படவில்லை. இதனால் அமெரிக்கா கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. 

இந்த கடன் சுமையை போக்க மேலும் கடன் வாங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் அதன் தாக்கம் பல உலக நாடுகளிலும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் உலகம் முழுவதும் காணப்பட்ட பொருளாதார நிலைமைகள் ஒரு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்க பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு உலக நிதி நெருக்கடி தொடர்பான விஷயங்களை ரிசர்வ்  வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் இதுபோன்ற வீழ்ச்சிகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து  ஆய்வு செய்யும் என்றும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

உலக நிதி நிலை மாற்றங்களுக்கு ஏற்ப உரிய முறையில் விரைவான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஏற்கனவே கடன் சுமையால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்காவின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், இது மேலும் மோசமடையலாம் என்றும் கூறப்படுகிறது.

மூன்று ஏ.க்களை ( ஏஏஏ) கொண்டிருந்த அமெரிக்காவின் உச்சபட்ச நிதி நிலைமை கடந்த வாரம் 2 ஏ.க்கள் பிளஸ் ஆக ( ஏஏபிளஸ் ) வீழ்ச்சி அடைந்துள்ளது என்று பிரபல ஸ்டாண்டர்டு அண்ட் புவர்ஸ் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: