முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது அளிக்கப்பட்ட புகார் - கடமையை செய்ய தவறிய மாவட்ட கலெக்டர்

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச்.3 - பி.ஆர்.பி.  எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கிரானைட் கற்களை எடுத்து சென்றதாக மேலூரை சேர்ந்த எஸ்.முருகேசன் என்பவர் அளித்த புகார் மீது விசாரணை செய்து உத்தரவு பிறப்பித்த மதுரை மாவட்ட கலெக்டர் தனது கடமையை சரிவர செய்ய தவறிவிட்டதாக மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் எஸ்.முருகேசன் ஆவார். இவர் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான அளவில் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், எனவே இந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2008-ம் ஆண்டு சென்னை புவியியல் மற்றும் சுரங்கதுறையின் இயக்குனருக்கு புகார் அனுப்பி இருந்தார்.

 

இதையடுத்து சென்னை புவியியல் மற்றும் சுரங்கதுறையின் இயக்குனர் இதுசம்பந்தமாக மதுரை மாவட்ட கலெக்டரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டதால் மதுரை மாவட்ட கலெக்டர் மதிவாணன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவில் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது எஸ்.முருகேசன் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அரசுக்கு எந்த வருவாய் இழப்பீடும் ஏற்படவில்லை என்றும் கூறி இருந்தார்.

மதுரை கலெக்டரின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.முருகேசன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை புவியியல் மற்றும் சுரங்கதுறை இயக்குனர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறையின் உதவி இயக்குனர், சுரங்க துறையின் உதவி புவியியலாளர், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தூத்துக்குடி கலால்துறை ஆணையர் ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

தீர்ப்பு விபரம்

 

இந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு விசாரித்து தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கூறி இருந்ததாவது:-

மதுரை எக்சைஸ் துறைக்கு அனுப்பிய நோட்டீசையும் மற்றும் மேலூர் வணிகவரி துறை துணை அதிகாரிக்கு அனுப்பிய நோட்டீசையும் (இரண்டு நோட்டீஸ்களையும்) ஆறுமுகம் என்பவர் பெற்று கொண்டதாகவும் இவர் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பணி செய்பவர் என்பது விசாரணையில் தெரியவந்தது என்றும் மனுதாரர் முருகேசன் கூறியுள்ளார்.

வணிகவரித்துறை மற்றும் கலால்துறைகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுகள் சில அங்கீகாரமற்ற நபர்களால் பெறப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு கூட மறுக்கப்படவில்லை.

வணிகவரித்துறையின் அமலாக்கப்பிரிவு பல நாட்கள் தணிக்கை செய்ததில்.  பி.ஆர்.பி. நிறுவனத்தாருக்கு ரூ 96,32,696 நிலுவை பாக்கி உள்ளது. இருந்தும் கூட மாவட்ட கலெக்டர் மதிவாணன் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு நற்சான்று கொடுத்துள்ளார். 

 

மனுதாரர் எழுப்பிய கேள்விகள்:

 

மனுதாரர் முருகேசனுக்கு ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், தனது கட்சிக்காரர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தாரின் குவாரி செயல்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டு அனுப்பிய மனு பற்றி குறிப்பிட்டுள்ளார். 28.07.09 தேதியிட்ட கடிதத்தில் மனுதாரர் முருகேசன் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

 

அதன் விவரம் வருமாறு:

 

  • 1. நீளம், அகலம், ஆழம் மற்றும் தோண்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் எவ்வளவு?
  • 2. குவாரியில் தற்போதைய இருப்பு என்ன?
  • 3. குவாரியில் எவ்வளவு வேஸ்ட் மெட்டீரியல் உள்ளது?

 

பி.ஆர்.பி. நிறுவனத்தார் மதுரை மாவட்டத்தில் மட்டும் 22 கிரானைட் குவாரிகளில் செயல்பாடுகள் செய்து வந்த போதும் 2-ம் எதிர்மனுதாரரின் (கலெக்டரின்) தகவல் அதிகாரியோ தன்னிடம் எந்தவொரு விபரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் எந்தவொரு விவரமும் இல்லாத போது 2-ம் எதிர்மனுதாரரான கலெக்டர், பி.ஆர்.பி. நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் சுத்தமானது என்று கூறுவது மிக மிக ஆச்சர்யமளிக்கிறது.

 

புலனாய்வு நடத்தவில்லை

 

ஒரு மாவட்ட கலெக்டருக்கு நேரடியாக இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக, மாவட்ட கலெக்டர் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தாரிடம் இருந்து பதில்களை பெற்றுக் கொண்டு அந்த பதிலை கடைப்பிடித்து அதை சர்ச்சைக்குரிய தனது உத்தரவில் கலெக்டர் காரணமாக தெரிவித்துள்ளார். மனுதாரர் மாவட்ட கலெக்டரின் புலனாய்வு வேண்டும் என்று கோருகிறார். மேலும் முதல் நிலை ஆவணங்களை கொடுத்து விட்ட காரணத்தால் அவர் கலெக்டர் முன்பு ஆஜராக தேவையில்லை. அந்த ஆவணங்களின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பி.ஆர்.பி. நிறுவனத்தாரின் விவகாரங்கள் குறித்து ஒரு சரியான புலனாய்வை நடத்தியிருக்க வேண்டும். அப்படி ஒரு புலனாய்வில் பெருமளவு வருவாய் ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது எனக் கண்டறிந்தால் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

 

பிரச்சினையை திசை திருப்பமாவட்ட கலெக்டரின் முயற்சி

 

மனுதாரருக்கும், பி.ஆர்.பி. நிறுவனத்தாருக்கும் இடையே உள்ள வழக்கு நிலுவையை காரணம் காட்டும் மாவட்ட கலெக்டரின் முயற்சி தன்முன் உள்ள உண்மையான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது. அரசு வழக்கறிஞரோ கலெக்டரின் சர்ச்சைக்குரிய உத்தரவின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார். மேலும் விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கில் சுரங்க செயல்பாடுகளை பொறுத்தமட்டில் சென்னை கனிமவள சுரங்கத் துறை ஆணையாளரும், மதுரை மாவட்ட கனிமவள சுரங்கத் துறை துணை இயக்குனரும், மதுரை மாவட்ட கனிம வள உதவி அதிகாரியும் எத்தனை கொள்ளளவு இருக்கிறது. மேலும் எந்த அளவுக்கு சுரங்கம் வெட்டப்பட்டது என்பதை முடிவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். கிரானைட் துண்டுகளை கணக்கில் எடுத்த பின்னர் அவர்களால் சரியான அளவை கணிக்க முடியும். அரசு வழக்கறிஞரால் எதிர் மனுதாரர்களுக்காக நோட்டீஸ் பெறப்பட்டிருந்தாலும் சென்னை கனிமவள சுரங்கத் துறை ஆணையாளர் இதுநாள் வரை எந்தவொரு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யவில்லை. 

அவதூறு வழக்கை மாவட்ட கலெக்டரின் சர்ச்சைக்குரிய உத்தரவின் அடிப்படையில் பி.ஆர்.பி. நிறுவனத்தார் தாக்கல் செய்துள்ளதை வைத்து பார்க்கும் போது மனுதாரர் முருகேசன் தன் தீர்வை அடைவதில் இருந்து அவரை தடுக்க வேண்டும் என்ற முயற்சி தெரியவருகிறது. மாவட்ட கலெக்டர் பி.ஆர்.பி. நிறுவனத்தார் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஒரு தரப்பினராக இல்லாத பட்சத்திலும் கூட, தன்னுடைய எதிர் பிரமாண பத்திரத்தில் அதுபற்றி குறிப்பிட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கை நிறுத்தவே மனுதாரர் முருகேசன் பி.ஆர்.பி. நிறுவனத்தார் மீது புகாரை கொண்டு வர முயற்சிக்கிறார் என்ற கலெக்டரின் வாதம் தேவையற்றது. இது ஒரு தனியார் உரிமையியல் தகராறு என்பதால் கலெக்டர் இதில் எந்த வழியிலும் தொடர்பில்லாதவர். மேலும் ஆச்சரியமளிக்கும் வகையில் மாவட்ட கலெக்டரின் சர்ச்சைக்குரிய உத்தரவு வழக்கு எண்: 109 / 2009 ன் ஆவணம் எண்: 22 ஆக இணைக்கப்பட்டுள்ளது. 

 

கலெக்டர் மீது நம்பிக்கை ஏற்படுத்தவில்லை

 

மாவட்ட கலெக்டரின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு இழப்பீடு கோரியிருப்பதும் மேலும் வழக்கை தாக்கல் செய்திருப்பதும் ஒரு விநோதமான சம்பவம். வழக்கை மேலும் நடத்துவதில் இருந்து தடுக்கவே மனுதாரர் முருகேசன் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார் என்ற கலெக்டரின் வாதம் தேவையற்றது. மாவட்ட கலெக்டர் தனியார் உரிமையியல் வழக்கு குறித்து அவருடைய அதிகாரபூர்வ பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்ட தன்மை எந்த விதத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்த வழக்கில் தனி நபரான மனுதாரர் முருகேசன், பெருமளவு வருவாய் ஏய்ப்பை வெளிக் கொணரும் நோக்கத்தோடு இந்த புகாரை உரிய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். ஆனால் மாவட்ட கலெக்டர் இந்த புகாரை மனுதாரருக்கும், பி.ஆர்.பி. நிறுவனத்தாருக்கும் இடையேயான ஒரு தனி நபர் தகராறாகவே பாவித்துள்ளார். இந்த விஷயத்தில் அவர் ஒரு அம்பயரைப் போல் அமர்ந்து பிரச்சினையை கேட்டிருக்கிறார். 

சர்ச்சைக்குரிய உத்தரவைப் பார்க்கும் போது பி.ஆர்.பி. நிறுவனத்தார் கொடுத்த தகவல்கள் அப்படியே அடுத்தடுத்த பத்திகளில் எழுதப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் சுதந்திரமான அணுகுமுறையே இல்லை. எந்த அளவுக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய கிடைத்திருக்க கூடிய கட்டமைப்பை வைத்து சுதந்திரமான முயற்சி எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. இந்த நாட்டின் குடிமகன் ஒருவன் ஒரு ஏமாற்று வேலையை கண்டுபிடித்து அதை அதிகாரிகளிடம் கொண்டு வரும் போது அதை மதிப்பு மிக்க வரமாக பாவிக்க வேண்டும். உண்மையை கண்டறிய தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.  மாவட்ட கலெக்டர் சுரங்க குத்தகையில் ஏற்படும் விதிமீறல்கள் பற்றி மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றிருக்கும் போது உண்மையை கண்டறிய எல்லா நடவடிக்கைகளையும் அவர் எடுக்கலாம். இப்பிரச்சினையில் தீர்வு காண அவரிடம் வணிகவரி மற்றும் கலால் மற்றும் சுங்கத்துறை ஆகிய துறைகளின் தகவல்கள் உள்ளன. ஆனால் பெருமளவு வணிகவரித் துறை ஏய்ப்பு ஏற்பட்டுள்ளது என்ற வணிகவரித்துறையின் கவலை குறித்தும் என்னவென்றே பார்க்கப்படவில்லை. 

அந்த பகுதியில் உண்மையில் எந்தளவிற்கு கிரானைட் கற்கள் தோண்டப்பட்டது என்ற தகவலை மனுதாரர் முருகேசன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட போது கனிமவள சுரங்கத் துறையின் அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள் தங்கள் அலுவலகத்தில் கிடைக்காததால் தங்களால் தகவல் தர இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மாவட்ட கலெக்டர் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அங்கீகாரம் இல்லாத கிரானைட் ஏற்றுமதி என்ற மிகப் பெரிய விஷயம் குறித்து பரிதாபமாக பார்க்கத் தவறி விட்டார். 

 

கடமை தவறிய மதுரை கலெக்டர்

 

இறுதியாக இந்த வழக்கில் 2 ம் எதிர்மனுதாரரான மாவட்ட கலெக்டர் அவராகவே செயல்பட்டு எல்லா துறையினரிடம் இருந்து ஆதாரங்களை சேகரித்து உண்மையை வெளிக்கொணர தன்னுடைய கடமையை செய்யவே இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுவதால் அவரது முடிவுகளை ஏற்க மறுப்பது ஒன்றுதான் இந்த நீதிமன்றத்துக்கு வழியாக உள்ளது. 

முதல் எதிர்மனுதாரர் (சென்னை ஆணையம்) மேல்முறையீட்டு அதிகாரி என்று அனுமானித்துக் கொண்டாலும் மனுதாரரின் புகாரை எல்லா கோணங்களிலும் திறந்த மனதோடு அவர் விசாரிக்க வேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் கருதுகிறது. இந்த வழக்கு அரசாங்கத்திற்கு பெருமளவு வருவாய் இழப்பு பற்றிய தொடர்புடையதாக இருப்பதால் சென்னை கனிமவள ஆணையர் மனுதாரர் முருகேசன் தன்னுடைய வழக்கை நிரூபிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் தேவையான ஆவணங்களை அவரே வரவழைக்க வேண்டும். 

 

கலெக்டர் உத்தரவு தள்ளுபடி

 

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் மனுதாரரின் இந்த ரிட் மனு அனுமதிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டரின் சர்ச்சைக்குரிய உத்தரவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் சென்னை கனிமவள சுரங்கத் துறை ஆணையாளர் மாவட்ட கலெக்டரின் கோப்பில் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. அதன் பிறகு எல்லா அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும் மனுதாரரின் புகாரின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் அவர் ஸ்தல ஆய்வு செய்து அந்த இடத்தில் இருந்து சரியான அளவுகளை பெற வேண்டும். இந்த பணியானது இந்த உத்தரவு நகல் பெறப்பட்ட 3 மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விசாரணையில் மனுதாரரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 

இந்த வழக்கில் மனுதாரர் முருகேசன் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்

 

``இந்த நாட்டின் குடிமகன் ஒருவன் ஒரு ஏமாற்று வேலையை கண்டு பிடித்து அதை அதிகாரிகளிடம் கொண்டு வரும் போது அதை மதிப்புமிக்க வரமாக பாவிக்க வேண்டும். உண்மையை கண்டறிய தங்கள் அதிகாரத்தின் கீழ் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.''

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago