முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்கோயில்களில் திருப்பணிகள் - கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - தமிழகத்தில் உள்ள அனைத்து  திருக்கோயில்களிலும் தேர் சீரமைத்தல், திருப்பணிகள்,  கும்பாபிஷேகம் என என்ன தேவையோ அவைகள் செய்து முடிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.  மேலும் பக்தி இல்லாதவர்கள் அறங்காவலர் குழுவில் தொடர முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார். 

இதுகுறித்த விபரம் வருமாறு:-

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரத்தின்போது விராலிமலை தொகுதி உறுப்பினர் விஜயபாஸ்கர்(அ.தி.மு.க.) பேசும்போது புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், ஸ்ரீஇந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தேரினை சீரமைக்க ஆவன செய்யப்படுமா என கேட்டார். இதற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பதிலளிக்கும்போது இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் பேசுகையில், கோயில் அறங்காவலர் குழுவில் பக்தியே இல்லாதவர்கள் உள்ளனர். எனவே, இந்த குழுவை மாற்றியமைக்கக்கூடிய திட்டம் உண்டா என்றார்.

முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பக்தியே இல்லாதவர்கள் எல்லாம் அறநிலையக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஏற்கனவே இருந்த குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அரசு கோரி வருகிறது. எனவே, இதன் பிறகு அறநிலையத்துறைக்கு தலைவர், உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்படுவர் என்றார்.

மீண்டும் உறுப்பினர் சந்திரகுமார் எழுந்து, ராஜினாமா செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே பலர் ராஜினாமா செய்துவிட்டனர். அப்படி ராஜினாமா செய்யாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்பிறகு மார்க்சிஸ்டு கட்சியின் சட்டமன்ற தலைவர் ஏ.செளந்தரராஜன் எழந்து, தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களின் தேர்களும் சீரமைக்கப்படுமா என்றார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களிலும் என்னென்ன தேவையோ அத்தனையும் செய்யப்படும். எந்தெந்த கோயில்களுக்கு கும்பாபிஷேகம், திருப்பணிகள் செய்யப்பட வேண்டுமோ அவையெல்லாம் செய்யப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்