முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - இங்கிலாந்தை அதிரவைத்த அயர்லாந்து

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

பெங்களூரு, மார்ச் 4 - இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இமாலய இலக்கை சேஸ் செய்த அயர்லாந்து அணி அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு காரணமான கெவின் ஓபிரைன், நான் இதுவரை விளையாடியதிலேயே மிகச்சிறப்பான ஆட்டம் இதுதான் என்று பெருமிதமாக தெரிவித்தார். 

10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் பி பிரிவு லீக் போட்டி ஒன்று  பெங்களூரு, சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக  நடைபெற்றது. இந்த போட்டியில் பலம் பொருந்திய இங்கிலாந்து அணி, தனது அண்டை நாடான  அயர்லாந்தை சந்தித்தது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு சாதகமாகவே கணிக்கப்பட்டிருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதற்கு ஏற்ப இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஸ்ட்ராஸ் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 13.3 ஓவர்களில் 91 ரன்களை சேர்த்தனர். அப்போது ஸ்ட்ராஸ் அயர்லாந்து பவுலர் டோக்ரெலின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய ட்ராட், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் அணியின் எண்ணிக்கை 111 ஐ எட்டியபோது நன்கு விளையாடிவந்த  பீட்டர்சன் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டிர்லிங்கின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஓபிரைனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக ட்ராட்டுடன் இயான்பெல் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் வேட்டையாடினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 288 க்கு உயர்ந்தபோது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த பெல் 81 ரன்கள் எடுத்திருத்த நிலையில், மூனேயின் பந்தில் ஸ்டிர்லிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சிறிது நேரத்திலேயே ட்ராட்டும் 92 பந்துகளில் 92 ரன்களை அடித்து மூனேயின் பந்தில் கிளீன்போல்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 44.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்னாக இருந்தது. அடுத்து வந்தவர்களில் கோலிங்வுட் 16 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை எடுத்தது. ஸ்வான் ஆட்டமிழக்காமல் 9 ரன்களை எடுத்திருந்தார். அயர்லாந்து தரப்பில் மூனே 4 விக்கெட்டுகளையும், ஜான்ஸ்ட்டன் 2 விக்கெட்டுகளையும், ஸ்டிர்லிங் மற்றும் டோக்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியில் துவங்கியது. அந்த அணித்தலைவர் வில்லியம் போர்ட்டர் பீல்டு, இங்கி. வேகப்புயல் ஆன்டர்சனின் முதல் பந்திலேயே கிளீன்போல்டானார். இதனை அடுத்து ஸ்டிர்லிங்குடன் ஜோடி சேர்ந்த ஜோய்ஸ்  பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 62 க்கு உயர்ந்தபோது 32 ரன்களை எடுத்திருந்த  ஸ்டிர்லிங், ப்ரேஸ்னன் வேகத்தில் பீட்டர்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஓபிரைன் ஓரளவு ரன் உயர்வுக்கு காரணமானார். முதல் 10 ஓவர்களில் 62 ரன்களை எடுத்த அயர்லாந்து 20.2 ஓவரில் ஓபிரைன் விக்கெட்டையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. ஓபிரைன் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் சுழலில் வீழ்ந்தார். அடுத்து ஸ்கோர் 106 எட்டியபோது ஜாய்ஸ் விக்கெட்டை ஸ்வானே வீழ்த்தினார். இவர் 61 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். அடுத்துவந்த வில்சன் நீண்ட நேரம் நின்று 3 ரன்களே எடுத்தார். இவரும் ஸ்வான் சுழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அயர்லாந்து அணி 24.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஜோடி சேர்ந்த கெவின் ஓபிரைன் மற்றும் குசாக் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக விக்கெட் கீப்பர் ஓபிரைனின் சகோதரரான கெவின் ஓபிரைனின் ஆட்டத்தில் அனல் பறந்தது. கெவின் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார்.  இவர்கள் இருவரும் அணியின் எண்ணிக்கையை  273 க்கு கொண்டுசென்றனர். அப்போது 47 ரன்களை எடுத்திருந்த குசாக் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். அடுத்து மூனே, கெவினுடன் கைகோர்த்தார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கெவின் 50 பந்துகளில் சதமடித்தார். உலக கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுவேயாகும். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 66 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்துவந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அணியின் எண்ணிக்கையை 317 வரை உயர்த்திய கெவின் 63 பந்துகளில் 113 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவரும் ரன் அவுட் முறையிலேயே ஆட்டமிழந்தார். இறுதியில் அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. மூனே 33 ரன்களுடனும், ஜான்ஸ்டன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 63 பந்துகளில் 113 ரன்களை குவித்த கெவின் ஓபிரைன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து வெற்றிபெற்ற பெருமையையும் அயர்லாந்து அணி பெற்றது. 

வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கெவின், இதுவே நான் இதுவரை ஆடிய போட்டிகளில் எல்லாம் மிகச் சிறப்பானது என்றார். மிகச்சிறந்த பார்வையாளர்களுக்கு முன்னால், மிகப்பெரிய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட இந்த நீண்ட இன்னிங்சை என்னால் என்றுமே மறக்க முடியாது. எதிர்மறையான எண்ணம் எதுவுமின்றி நான் செயல்பட்டேன். பந்துகளும் எனக்கு சிறப்பாக வந்தன. எல்லாமே சரியாக அமைந்தது. நாங்கள் ஆரம்பத்தில் தடுமாறினோம். நான் களமிறங்கியபோது அடிக்க வேண்டிய ரன்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. என்னுடன் ஜானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால்தான் நாங்கள் வெற்றிபெற முடிந்தது என்றார். 

தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ், 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுமே நாங்கள் மிகவும் நம்பிக்கை அடைந்துவிட்டோம். ஆனால் கெவின் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து சென்றுவிட்டார். ஆனாலும் இதனால் எங்களது உலக கோப்பை கனவு தகர்ந்துவிடவில்லை. நாங்கள் மீண்டு எழுவோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்