முக்கிய செய்திகள்

சொந்த வீடு வைத்திருப்போருக்கு 4 சிலிண்டர்கள்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.11 ​ சொந்த வீடு வைத்திருப்போருக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு படிப்படியாக மானியத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் சமையல் கேஸ் விநியோகத்தில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் அடக்க விலை சிலிண்டருக்கு ரூ. 642. 35 காசு என்ற விலையில் வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்துள்ளது. இதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் ரத்து செய்யப்படுகிறது. 

தற்போது சராசரியாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ஒரு சிலிண்டர் 45 நாள் முதல் 60 நாள் வரை வருகிறது. எனவே அவர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. இதில் அவர்கள் 4 சிலிண்டர்களை மானிய விலையிலும், 2 சிலிண்டர்களை அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியதிருக்கும். இது மக்களை அதிகம் பாதிக்காது என்று கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த முடிவு விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். 

சமையல் கேஸ் விநியோகத்தில் சில ஏஜன்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. போலி பெயரில் சிலிண்டர்களை பதிவு செய்து வருடத்திற்கு 30 சிலிண்டர்களை அவர்கள் பயன்படுத்தியது போல் கணக்கு காட்டி வெளிமார்க்கெட்டில் அவற்றை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் வந்துள்ளன. இதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே கேஸ் ஏஜன்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல் டீசல் விலையையும் நிர்ணயிக்கும் உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளது. மண்ணெண்ணெய் ஏழைகளுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதில் மாற்றம் செய்வது குறித்தும் மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: