உலக கோப்பை - தெ.ஆப்பிரிக்கவுடன் மோதி சின்னாபின்னமான நெதர்லாந்து

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
de Villiers2

 

மொஹாலி, மார்ச் 4 - உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய நெதர்லாந்து அணி பரிதாப தோல்வியை சந்தித்தது. 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் 16 வது போட்டி நேற்று சண்டிகர் மாநிலம் மொஹாலியில் பகல் ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் பி பிரிவில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க அணியுடன், நெதர்லாந்து அணி மோதியது.  டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் போரன், தென் ஆப்பிரிக்க அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி துவக்கத்தில் நிதானமாக ஆடியது. துவக்க ஆட்டக்காரர்கள் ஹசீம் ஆம்லா மற்றும் கிரீமி ஸ்மித் ஆகியோர் நல்ல துவக்கத்தை தந்தனர். அணியின் எண்ணிக்கை 51 ஐ எட்டியபோது, 20 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், லூட்ஸின் பந்தில் கிளீன்போல்டானார். அடுத்ததாக களமிறங்கிய காலிஸ் 2 ரன்களை மட்டும் எடுத்த நிலையில் டென் டோயிஸ்சாட் பந்தில் விக்கெட் கீப்பர் பரேசியினால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து டிவில்லியர்ஸ், ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நெதர்லாந்து  வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டனர். ஆனால் அனுபவ வீரர்களான ஆம்லா மற்றும் டிவில்லியர்ஸ் நங்கூரமிட்டு ஆடினர்.  டிவில்லியர்ஸ் 88 பந்துகளில் சதமடித்தார். இவரை அடுத்து ஆம்லா 121 பந்துகளில் சதமடித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 279 ஐ அடைந்தபோது 113 ரன்களை அடித்திருந்த ஆம்லா, டென் டோயிஸ்சாட் பந்தில் கூப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சிறிது நேரத்தில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த டிவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனார். இவர் எடுத்த ரன்கள் 134. அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் டுமினியின் அதிரடி வாணவேடிக்கையால் தென் ஆப்பிரிக்காவின் ரன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. டுமினி 15 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதில் 2 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் இருந்தன. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ப்ளீசிஸ் ஆட்டமிழக்காமல் 18 ரன்களையும், வான்விக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நெதர்லாந்து தரப்பில் டென் டோயிஸ்சாட் 72 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லூட்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

நெதர்லாந்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சோபிக்கவில்லை. துவக்க வீரர் கெர்வீஜீ, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸின் பந்தில் காட் அண்டு போல்டு முறையில் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 26. அடுத்ததாக களமிறங்கிய கூப்பரும் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 9 ரன்களை எடுத்திருந்த கூப்பர், காலிசின் பந்தில் ஸ்டெயினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜுய்டரென்ட் களமிறங்கினார். இவரும் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பரேசியும் இணைந்து சேர்த்த 35 ரன்களே நெதர்லாந்து அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாகும். 21.3 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை 81 ஆக இருந்தபோது 15 ரன்கள் எடுத்திருந்த ஜுய்டரெண்ட், பீட்டர்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய ஒரே வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்  பரேசியும் 44 ரன்களை எடுத்திருந்தபோது டுமினியின் பந்தில் அவுட்டானார். அப்போது நெதர்லாந்து அணி 22.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து நெதர்லாந்து வீரர்கள் சீட்டுக்கட்டுகள் சரிவதுபோல அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 232 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது நெதர்லாந்து. தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும், காலிஸ், பீட்டர்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டெயின், டுமினி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 98 பந்துகளில் 134 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: