முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்டூர் காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம்: முதல்வர்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.12 - திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் காவல் நிலையம் ரூ.40 லட்சம் செலவில் திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் கடந்த 1ம் தேதி துவங்கிவிட்டது என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (11.8.2011) கேள்வி பதில் நேரத்தின் போது, திருத்துறைப்ண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே. உலகநாதன்(சி.பி.எம்.)  எழுப்பிய கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: திருத்துறைப்ண்டி தொகுதி, கோட்டூர் காவல் நிலையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?

பதில்: திருத்துறைப்ண்டி தொகுதி, கோட்டூர் காவல் நிலையம் அரசுக்குச் சொந்தமான சமுதாய நலக் கூட கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது.  இக்காவல் நிலையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக 40 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து, 23.9.2010​ல் அரசாணை வழங்கப்பட்டது.  24.12.2010​ல் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.  தற்போது 7.6.2011​ல் ஒப்பந்ததாரருடன் பணி ஒப்பந்தம், அதாவது ஒர்க் அக்ரீமென்ட் போடப்பட்டு, புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பணிகள் 1.8.2011 அன்று துவங்கப்பட்டுள்ளன.  கோட்டூர் காவல் நிலையம் விரைவில் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதனைத்தொடர்ந்து பெரியகுளம் உறுப்பினர் லாசர், பெரியகுளத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் டி.எஸ்.பி.அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நான் பதிலளித்தபோது, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து போலீஸ் நிலையங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்கும். அதற்கேற்ப கட்டிட வசதிகள் செய்து தரப்படும் என்றேன்.இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

இதையடுத்து சி.பி.எம்.உறுப்பினர் அண்ணா துரை எழுந்து, முதல்வர் காவல்துறை கட்டிடடங்கள் அனைத்தும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் என்று கூறியதற்கு மகிழ்ச்சி. காவல்துறை சம்மந்தமான கட்டிடங்கள் மட்டுமல்லாது அரசு கட்டிடங்கள் அனைத்தும் சீர் செய்யப்படுமா என்றார்.

இதற்கு மீண்டும் முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில், காவல்துறை சம்பந்தமான கட்டிடங்கள் மட்டுமல்லாது, அரசு கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்திருந்தால் புனரமைக்கப்படும். மிக மோசமான நிலையில் இருந்தால் புதிய கட்டிடம் கட்டப்படும். இவை படிப்படியாக செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்