முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களை கலக்கிய சீட்டாட்ட கும்பல் கைது

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், ஆக.12 - மதுரை எஸ்.பி. அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் திருமங்கலம் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தென்மாவட்டங்களை கலக்கிய சீட்டாட்ட மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.22லட்சம், 75.5 பவுன் தங்க நகைகள், பொலீரோ ஜீப், 10லட்சம் மதிப்புடைய வைப்புத்தொகை ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெட்டுச்சீட்டு, உள்ளே வெளியே என பல்வேறு பெயர்களில் சீட்டு விளையாட்டினை அறிமுகம் செய்து விருதுநகர் பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் தங்களிடமிருந்து பல லட்சம் ரூபாய், நகைகள் மற்றும் வாகனத்தை மோசடி செய்து அபகரித்துவிட்டதாக மதுரை எஸ்.பி. அஸ்ராகர்க்கிடம் சிலர் புகார் செய்தனர். இதையடுத்து எஸ்.பி.அஸ்ரா கர்க் ஆலோசனையின் பேரில் மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த பாலு(எ) பாலமுருகன் தன்னிடமிருந்து 6.5 பவுன் தங்கநகைகளை சீட்டாட்ட கும்பலொன்று ஏமாற்றி பறித்து சென்று விட்டதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இதேபோல் காரைக்குடியைச் சேர்ந்த தட்சிணைமூர்த்தி என்பவர் தன்னுடைய பொலீரோ காரை சீட்டாட்ட கும்பல் மோசடி செய்து எடுத்து சென்றுவிட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் மதுரை செல்லூரைச் சேர்ந்த பொன்னாங்கத்தேவர் மகன் அஞ்சானை(39) என்பவர் தனது 15 பவுன்நகைகளைகளை சீட்டாட்ட கும்பல் பறித்து சென்று விட்டதாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார்களை தொடர்ந்து போலீசார் முறைப்படி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அஸ்ராகர்க் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன் மேற்பார்வையில் திருமங்கலம் டவுன் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சீட்டாட்ட கும்பலை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.அதன்படி புகார் கொடுத்த அழைப்பினை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட விருதுநகர் மோசடி கும்பலைச்சேர்ந்த 3 பேர் திருமங்கலம் மாஸ்மகால் பகுதிக்கு வந்தபோது அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரையும் மடக்கி பிடித்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நேற்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். சீட்டாட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேர் பிடிபட்ட தகவலறிந்த எஸ்.பி.அஸ்ராகர்க் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் ஆகியோர் விரைந்து வந்து 3பேரிடம் துருவி,துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிடிபட்டவர்கள் விருதுநகரைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன், ஓட்டல் அதிபர் ராஜா, மோகன்ராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் விருதுநகர் அருகேயுள்ள பாலவநத்தத்தை சேர்ந்த அண்டல்(எ) ஜெயச்சந்திரன் வீட்டில் தாங்கள் மோசடி செய்த பணம், நகை மற்றும் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாலை நேரத்தில் பாலவநத்தத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அண்டல்(எ) ஜெயச்சந்திரன் வீட்டை சுற்றி வளைத்து அவனை மடக்கிபிடித்து வீட்டை முழுமையாக சோதனையிட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22லட்சம் ரூபாய், 75.5 பவுன் தங்கநகைகள், 10லட்சம் மதிப்புடைய வங்கி வைப்பு பத்திரங்கள், பொலீரோ ஜீப் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 

இதனை தொடர்ந்து 3 காவல்நிலையங்களிலும் பதிவான வழக்குகளின் பேரில் முரளிக்கிருஷ்ணன், ஓட்டல் அதிபர் ராஜா, மோகன்ராஜ், அண்டல்(எ)ஜெயச்சந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் முறைப்படி கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பிடிபட்ட சீட்டாட்ட மோசடி கும்பல் தங்களது தங்களது வாடிக்கையாளர்களை செல்போனிலே தொடர்பு கொண்டு அழைப்பதும், ஒன்றாக கூடியவுடன் மறைவான காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து சீட்டாட்டம் நடத்தி மோசடி செய்து வந்த தகவலும் வெளியானது. மொத்தத்தில் தென்மாவட்டங்களில் மோசடி சீட்டாட்டத்தின் மூலம் கலக்கி வந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 50 லட்சம் மதிப்பிலான நகை, பணம், பொலீரோ ஜீப்பை பறிமுதல் செய்த திருமங்கலம் இன்ஸ்பெக்டர் வேணுகோபால், எஸ்.ஐ. சரவணன், ஏட்டுக்கள் முருகேசன், தங்கராஜ், செல்லப்பாண்டி, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் ஆகியோரை மதுரை எஸ்.பி. அஸ்ராகர்க் பாராட்டினார்.

 

பாக்ஸ் செய்தி

 

சீட்டாட்ட மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்ட முரளிகிருஷ்ணன் தன்னிடமுள்ள அசாத்தியமான திறமையால் உடன் சீட்டு விளையாடுபவர்களை ஜெயிக்க விடாமல் எப்பொழுதும் தானே ஜெயிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். இதற்காக வெட்டுச்சீட்டு, மூன்று சீட்டு, உள்ளே வெளியே, ஜெயிக்குது-தோக்குது எனப்படும் உடனடி முடிவு காணும் சீட்டாட்ட முறைகளையே முரளிக்கிருஷ்ணன் கையாண்டு மோசடி மூலம் பணம் சேர்த்துள்ளான். அதேபோல் தோல்வியடைந்த சீட்டாட்டத்திலிருந்து வெளியேறுபவர்களை செல்லவிடாமல் அவர்களது நகைகள் மற்றும் இதரபொருட்களை அடகாக பெற்று பணம் கொடுத்து, அந்த பணத்தையும் சீட்டாடி வெற்றி கொள்வது முரளிக்கிருஷ்ணனின் கைவந்த கலையாகும். பல்வேறு மோசடிகளை செய்து சீட்டாட்டத்தில் பண் குவித்த இந்த கும்பல் போலீசில் சிக்கியதை தொடர்ந்து பல்வேறு புகார்கள், பல்வேறு காவல்நிலையங்களில் இந்த கும்பல் நீது குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்