முக்கிய செய்திகள்

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தால் சம்பளம் உயர்வா?

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.12 - குறைந்தபட்ச தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் உயர்ந்துள்ளது என்ற மத்திய அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன. பாராளுமன்ற லோக்சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்த பேசினார். அப்போது அவர் கூறுகையில் குறைந்த பட்ச தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மற்ற தொழிலாளர்களுக்கும் சம்பளம் உயர்ந்துள்ளது என்றார். கடந்தாண்டு மட்டும் 55 லட்சம் மக்களுக்கு 100 நாள் வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை துணை அமைச்சர் பிரதீப் ஜெயின் கூறினார்.  இந்த திட்டத்தால் ஆந்திராவில் மட்டும் 15 சதவீத நிலத்தில் விவசாயம் அதிகரித்துள்ளது என்றார். அமைச்சர்களின் பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர். குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உத்தரவாதத்தால் நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு எதுவும் ஏற்படவில்லை என்றனர். பா.ஜ. லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து பேசுகையில் தற்போதுள்ள இந்த திட்டமானது நடைமுறைக்கு ஒத்துவரும்படி இல்லை. இதை வைத்து பார்க்கும்போது இந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்றே கூறலாம் என்றார். வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்போ செல்வமோ எதுவும் உண்மையிலேயே உருவாக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் செயல்படுத்த முடியாதவைகளை நீக்கி நடைமுறைக்கு உகுந்ததாக்க மாநில வாரியாக எம்.பி.க்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி ஆய்வு செய்ய வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார். 

இந்த திட்டத்தை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கமிட்டி உள்ளது என்று உறுப்பினர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த அமைச்சர் ஜெயின் முயன்றார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதில் மாநில அரசுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. அதனால் திட்டத்தில் ஏதாவது குளறுபடி இருந்தால் அதை நீக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயின் கேட்டுக்கொண்டார். மேலும் மாநிலம் வாரியாக எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டவும் அமைச்சர் ஜெயின் ஒப்புக்கொண்டார். இது குறித்து சபையில் தனியாக விவாதம் நடத்தப்படும் என்றும் சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: