முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தபயவுக்கு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.12 - தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்த இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவின் செயலுக்கு தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரம் முடிவடைந்ததும், விதி 55ன் கீழ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

இதன்மீது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்(தே.மு.தி.க.) பேசும்போது கூறியதாவது:

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அதிபரின் தம்பி கோத்தபாயே கருத்து தெரிவித்திருக்கிறார். ஒன்றரை கோடி மக்கள் தொகை  உள்ள இலங்கை நாட்டின் பிரதிநிதி ஒருவர், அதைவிட 5 மடங்குக்கும் அதிகம்  மக்கள் தொகை உள்ள தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கூறுகையில், தமிழக முதல்வரின் சொந்த ஆதாயத்துக்காக இயற்றப்பட்டது என்று கூறியுள்ளார். அரசியல் ஆதாயம் தேடும் நிலையில் தமிழக மக்கள் இல்லை. 

போர் குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. சபை, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க காங்கிரஸ், இங்கிலாந்து ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அங்குள்ள மக்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பது தான் வேடிக்கை. 

1948ல் இருந்தே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அரச மரம்தான் அங்கே புத்தமரம். காந்தியடிகளின் அறப்போராட்டம் வெற்றி பெற்றது. இலங்கையில் காட்டுமிராண்டிகள் இருப்பதால் அறப்போராட்டம் தோல்வி அடைந்தது. 

மகிந்தா துரியோதனன் என்றால், கோத்தபாயே துச்சாதனன்.  இந்திய அரசு கடந்த காலங்களில் கடைபிடித்த போக்குதான் காரணம். இன அழிவு நடந்த போது இந்தியா துணை போனது தான் காரணம். இந்தியா துணை போக முன்னாள் முதல்வர் கருணாநிதியும் துணை போனார். எனவே, தான் இந்தியா ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தில் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நடைபெற்றுள்ள அனைத்து சம்பவங்களுக்கும் இந்திய அரசு தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும். 

இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். 

ஏ.செளந்திரராஜன்(சி.பி.எம்.): இலங்கையில் உள்ள குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கேட்டும் அதிகார பகிர்வு தர மறுக்கிறது இலங்கை அரசு. அதிகார பகிர்வு தமிழர்களுக்கு தேவையில்லை என்று கோத்தபயே கூறுகிறார். இந்திய அரசு நம்மை ஏமாற்றியதோடு, எல்லாரோயும் ஏமாற்றி வருகிறது. 

குணசேகரன்(சி.பி.ஐ.): ஆங்கில டி.வி.க்கு அளித்த பேட்டியில் கோத்தபயே, 3 விதமான கருத்துக்களை கூறியுள்ளார். 1. அரசியல் ஆதாயம், 2.தமிழக அரசும், இந்திய அரசும் இங்குள்ள மீனவர்களை அடக்கி வைக்கவேண்டும், 3.இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை, தாக்குதல்கள் இந்திய அரசுக்கு தெரியும் என்பது அந்த 3 கருத்துக்கள். 

மத்திய அரசு, தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்கிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிய வேண்டும். அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொள்கைக்காக, நியாயத்திற்காக விளைவுகளை எதிர்பார்க்காமல் செயல்படுபவர் முதல்வர். எனவே, ஈழத்தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட, தமிழக மீனவர் நலன் காத்திட, வலுவான மக்கள் இயக்கத்தினை நடத்திட வேண்டும்.

கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்): தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோத்தபாயே, தரமற்ற வகையில் விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, துணை தூதரகம் இனிமேல் சென்னையில் இயங்கக்கூடாது என்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 400க்கும் மேற்பட்ட  மீனவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசின் மீது கொலை வழக்கு போட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செ.கு.தமிழரசன்(இந்திய குடியரசு கட்சி): உரிமையின் அடிப்படையில் தீர்மானம் இயற்றினால், அதனை ஏளனம் செய்வது, கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வளவுக்குப்பிறகும் மத்திய அரசு மெளனமாக இருப்பது ஏன்? இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மட்டுமே வழி. எந்தவித ஆதாயமும் தேடாமல் நம்முடைய முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு நாம் அனைவரும் கேடயமாகவும், பாதுகாப்பாகவும் இருந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பிரதமர், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோரை சந்தித்து இந்த தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவோம். இதற்காக எம்.எல்.ஏ.க்கள் குழு டெல்லிக்கு செல்லலாம். அங்கு இந்த கருத்தை வலியுறுத்தலாம் என்றார்.

இவ்வாறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்