பி.டி. பருத்தி சாகுபடி பரவலாக்கும் திட்டம் இல்லை

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.13 - விவசாயிகளுக்கு நிச்சயமான பலன் அளிக்கும் என்ற உறுதி இல்லாததால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தி சாகுபடியை பரவலாக்கும் எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாது என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிவித்தார்.  2011-2012 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீதான ஐந்தாவது நாள் விவாதம் நேற்று தொடர்ந்து நடைபெற்றது.அப்போது  சட்டசபை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதை ஒரு அறிக்கையை வாசித்தார்.அதில் அவர் கூறியதாவது:

இந்த சட்டமன்ற பேரவையில் 4.8.11 அன்று தாக்கல் செய்யப்பட்ட 2011-2012 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையில், முன்னோடி தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடி திட்டம், நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியை பரவலாக்குதல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவஹ்றில் உகந்த பயிர் மேலாண்மையை கடைபிடித்தல், பசுமை குடில், துல்லிய பண்ணையம் முறைகளில் காய்கறிகளை பயிரிடுதல், தோட்டக்கலை பயிர்களுக்கான அடர் நடவுமுறை போன்றவை தீவிரமாக பரவலாக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மாமன்றத்தில் பேசிய உறுப்பினர்கள் சிலர், பி.டி ரகப் பருத்தி பயிரிடுவதில் பலப் பிரச்சனைகள் இருப்பதால் இதனை அரசு ஊக்குவிக்கக்கூடாது என்ற கருத்தினை தெரிவித்திருந்தனர். விவசாயிகளும், அரசு அளவில் பி.டி ரகப் பருத்தி பயிரிடுவதை ஊக்குவிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

2002-ம் ஆண்டு மத்திய அரசு பி.டி ரகப் பருத்தியினை விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக ஜெனிடிக் என்ஜீனியரிங் அப்பூருவல் கமிட்டி மூலம் அனுமதி அளித்து இன்று பல மாநிலங்களில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பி.டி பருத்தியின் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்பதால், லாப நோக்கோடு தனியாரிடம் பி.டி ரக விதைகளை வாங்கி தமிழக விவசாயிகளும் பயிரிட்டு வருகிறார்கள். எனவே தான், நிதிநிலை அறிக்கையில் பி.டி ரகப் பருத்தி சாகுபடி பரவலாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி என்பதாலும், விவசாயிகளுக்கு நிச்சயமான பலன் அளிக்கும் என்ற உறுதி இல்லாததாலும், இதனை அரசளவில் பரவலாக்கக் கூடாது என்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கருத்தினை ஏற்று, பி.டி பருத்தி சாகுபடியை பரவலாக்கும் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: