முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க ஊழல்: எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

பெங்களூர்,ஆக.- 15 - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுரங்க ஊழல் புகாரால் தனது பதவியை இழக்க நேரிட்டது. அவர் மீதான புகார் குறித்து லோக் அயுக்தா சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.  ஷிமோகா மாவட்டத்தில் பத்ரா மேலணை திட்ட பணியை ஒப்பந்ததாரருக்கு ஒப்படைத்ததில் முறைகேடு நடந்ததாக எடியூரப்பா மீது மதசார்பற்ற ஜனதா தள செய்தி தொடர்பாளர் தத்தா லோக் அயுக்தா போலீசில் புகார் கொடுத்தார். 

தனது புகாரில் பத்ரா மேலணை கட்ட பிரபல தொழிலதிபர் ஷெட்டிக்கு சொந்தமான நிறுவனத்தின் கீழ் செயல்படும் முருடேஸ்வர் மின் கழகத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஜோதி கிர்லோஸ்கர், சேகர் ஆகிய நிறுவனங்களை விட இந்த நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 1,030 கோடி ஏலத் தொகை குறிப்பிட்டு இருந்தது. 

இருந்தாலும் இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதற்காக எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் தவளகிரி டெவலப்பர்ஸ் மற்றும் சாஹ்யாத்ரி ஹெல்த்கேர் நிறுவனங்களுக்கு ரூ. 13 கோடி வங்கி கணக்கில் போடப்பட்டது என்று கூறியிருந்தார். 

இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட லோக் அயுக்தா சிறப்பு நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்த லோக் அயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினார்கள். முதல் கட்டமாக கர்நாடக நீர்ப்பாசன நிறுவனம், நீர்வளத் துறையிடம் புகார் தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் புகார் குறித்து விளக்கம் கேட்டு எடியூரப்பா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொழிலதிபர்  ஷெட்டி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த புகார் குறித்து விசாரணை தொடங்கி இருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்