முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.- 15 - யோகா குரு ராம்தேவின் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. யோகா குரு ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராம்தேவுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் இருக்கிறது. இது பற்றி மத்திய அரசு விசாரணைக்கு உததரவிட்டது. இதையடுத்து அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியது. இதில் ராம்தேவுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதும், வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் உள்ள வங்கிக்கு ரூ. 40 லட்சமும், லண்டனில் உள்ள ஒரு வங்கிக்கு ரூ. 1.5 கோடியும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பணம் ராம்தேவ் அறக்கட்டளை மூலம் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதா? அல்லது வேறு யாருக்காவது அனுப்பப்பட்டதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்ப முறைப்படி அனுமதி பெறப்பட்டதா என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. 

லண்டன் மற்றும் ஆப்பிரிக்காவில் உல்ள வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பணம் கறுப்பு பணமாக இருக்கும் பட்சத்தில் ராம்தேவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாயும். கறுப்பு பணத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அவருக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்த வங்கி கணக்கு விபரங்களை தவிர, ராம்தேவின் சொத்து விபரங்கள் பற்றியும், அமலாக்கப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. ராம்தேவ் அறக்கட்டளை மூலம் ஏராளமான நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கான்பூரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. 

வேறு எங்கு நிறுவனங்கள் உள்ளன என்ற விபரங்களை கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அமலாக்கப் பிரிவு கேட்டிருக்கிறது. முதல் கட்டமாக கான்பூரில் உள்ள நிறுவனங்கள் பற்றிய விபரங்களை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளது. இந்த விபரங்கள் 2 சி.டிக்களில் பதிவு செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இருந்தும் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அங்குள்ள கம்பெனிகள் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் ஒட்டுமொத்தமாக விசாரணை தொடங்கப்படவிருக்கிறது. 

தனது அறக்கட்டளை நடத்தும் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ. 1100 கோடிக்கு வர்த்தகம் நடப்பதாக பாபா ராம்தேவ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். வெளிநாட்டு வங்கிகளுக்கு பணம் அனுப்பியது குறித்தும், கான்பூரில் உள்ள மூலிகை நிறுவனங்கள் பற்றியும் அமலாக்க பிரிவு நடத்தி வரும் விசாரணை பற்றி ராம்தேவின் செய்தி தொடர்பாளர் நிஜரவாலாவை தொடர்பு கொண்டு கேட்ட போது கருத்து தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்