முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து மிகச்சிறந்த அணி கேப்டன் தோனி புகழாரம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பர்மிங்ஹாம், ஆக.- 15 - அனைத்து வகையிலும் சிறப்பான ஒரு அணியிடம்தான் எங்கள் அணி தோற்றுள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் படுதோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் துவக்கத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் 4 டெஸ்ட்டுகளைக் கொண்ட இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து முதலிடத்தை இழந்துள்ளது. அதேநேரத்தில் 3 வது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி முதலிடத்தை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து 4 வது போட்டியிலும் இந்திய அணி தோற்குமானால் அது இரண்டாவது இடத்தையும் தென் ஆப்பிரிக்க அணியிடம் இழக்க நேரிடும். இந்நிலையில் தொடர் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கருத்து தெரிவிக்கையில், எங்களது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. அது எதனால் என்ற காரணமும் தெரியவில்லை. எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஒவ்வொரு தொடரிலும் அனைத்து வீரர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு அவசியம். நாங்கள் இன்னும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். 

இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு சரியாக அமையவில்லை. கடந்த ஆண்டு நாங்கள் 200 நாட்கள் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளோம். ஆனால் அது கடின உழைப்பு ஆகாது. எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்த தவறிவிட்டோம். அதுவே  சில வாய்ப்புகளை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது. நாம் நம்பர் ஒன்றாக இருக்கிறோமா இல்லையா என்பது முக்கியமல்ல.  தொடர்ச்சியாக நம்முடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். நம்பர் ஒன் இடம் என்பது ஒருவருக்கே சொந்தம் கிடையாது. இது ஒரு பூனை எலி ஓட்டம் போன்றது. நமக்கு அடுத்து உள்ளவர்கள் அதற்காக முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். இந்த தொடரில் இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது. இதற்காக என்னுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இந்த தொடரில் 60 சதவீத பங்களிப்பையே வெளிப்படுத்தினோம். 

இந்த தொடர் வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் தெரிவிக்கையில், நம்பர் ஒன் இடம் என்பது எங்களது நீண்ட நாள் இலக்கு. அதை நாங்கள் அடைந்துவிட்டோம் என்றார். இதற்காக நாங்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளோம்.  கடந்த காலத்தில் இருந்த அணிகளைவிட மிகச் சிறந்த அணி தற்போது உள்ளது. நாங்கள் மிகச் சிறந்த சாதனையை படைத்துள்ளோம் என்று பெருமையாக கூறினார். 

இந்திய அணியின் தோல்வியை அடுத்து இந்திய வீரர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்களும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய மோசமான தோல்வியை இந்தியா சந்தித்ததே இல்லை என்று தெரிவித்தார். 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோற்றதை ஜீரணிக்கவே முடியவில்லை என்றார். மேலும் இந்த தொடரில் இந்திய அணியால் மிகப்பெரும் ஸ்கோரை எடுக்கவே முடியவில்லை என்பதும் கவலை அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். உலக கோப்பையை வென்றதை பாராட்டினாலும், டெஸ்ட் போட்டி என்பது கிரிக்கெட்டின் அடிப்படையான ஒன்று அதில் இந்திய வீரர்கள் இவ்வாறு கோட்டை விட்டது ஏமாற்றமளிப்பதாகவும் கங்குலி தெரிவித்தார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே தெரிவிக்கையில் மூத்த வீரர்கள் தங்களது ஓய்வை அறிவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்