முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 16 - சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் திடீர் தடை விதித்து ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனால் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  எனினும் தான் திட்டமிட்டபடி இன்று  ( 16 ம் தேதி ) டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹசாரே அறிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக வலுவான சட்ட மசோதா ஒன்றை  கொண்டு வர வேண்டும் என்று  கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் தேதி அன்னா ஹசாரே என்ற சமூக சேவகர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அன்னா ஹசாரே  தனது உண்ணாவிரதத்தை நிறுத்தினார். இதை அடுத்து  ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தயாரிப்பு குழுவில்  அன்னா ஹசாரேவும்  சேர்க்கப்பட்டார். ஆனால் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  தலைமையிலான இந்த குழுவில் கருத்து  வேறுபாடுகள் ஏற்பட்டன.  லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு  தலைமை நீதிபதி ஆகியோரையும்  கொண்டுவர வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தினார்.  ஆனால் மத்திய அரசு இதற்கு இணங்கவில்லை.
இதனால் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இன்று ( 16 ம் தேதி ) முதல் காலவரையற்ற  உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்வதற்கு அன்னா ஹசாரேவுக்கு 22 நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை டெல்லி போலீசார்  விதித்து இருந்தனர்.
ஆனால்இந்த நிபந்தனைகளில் 16 நிபந்தனைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளவதாக ஹசாரே குழுவினர் கூறினர்.
3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவு 9 மணிக்கு  மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை ஏற்க ஹசாரே குழுவினர் மறுத்து விட்டனர்.
அன்னா ஹசாரே டெல்லியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் ( ஜே.பி. ) பூங்காவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 22 நிபந்தனைகளையும் ஹசாரே குழுவினர் ஏற்றுக்கொள்ளாததால் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் இப்போது தடை விதித்துள்ளனர்.
ஜே.பி. பூங்காவில் ஹசாரே உண்ணாவிரதம் இருக்க அளிக்கப்பட்ட அனுமதியை டெல்லி போலீசார் திரும்ப பெற்றுக்கொண்டனர்.
ஆனால் திட்டமிட்டபடி  தான் உண்ணாவிரதம் இருக்க போவதாக ஹசாரே குழுவினர் அறிவித்துள்ளனர்.
தைடயை மீறி உண்ணாவிரதம் இருக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இன்று  ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் அவரை  கைது செய்து  சிறையில் அடைக்கவும் டெல்லி போலீசார்  தயாராக இருக்கிறார்கள் என்று டெல்லி போலீஸ்  வட்டாரங்கள்  கூறியுள்ளன.
தன்னை கைது  செய்து சிறையில் அடைத்தாலும் அதே சிறையில் இதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கவும்  தான்  தயார் என்ஏறு அன்னா ஹசாரே ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹசாரே டெல்லியில் எங்கே உண்ணாவிரதம் இருந்தாலும் அதை முறியடிக்கவோ அல்லது அவரை  கைது  செய்யவோ போலீசார்  உரிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
உண்ணாவிரம் நடக்குமா? நடக்காதா? என்பது காலை தெரிந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்