முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தின உரையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 16 - நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்கவோ, கண்ணியத்தை குலைக்கவோ, மனம் அறிந்தோ, அறியாமலோ யாரும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வேண்டுகோள் விடுத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.  ஊழலை ஒழிக்க ஒரேயொரு வழியோ, தீர்வோ இல்லை. அரசு நிர்வாகத்தின் வெவ்வேறு நிலைகளிலும் கண்காணிப்பும், வெளிப்படை தன்மையும் நிலவினால்தான் இது சாத்தியம். இது தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உரியது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டது. அரசு எந்திரம், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றம் ஆகியவை அரசியல் சட்டம் வகுத்தளித்தபடி தங்களின் வரம்புக்குள் செயல்பட வேண்டும். ஒன்றையொன்று மிஞ்சப் பார்க்க கூடாது. ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செயல்பட்டால்தான் மக்கள் நலன் காக்கப்படும். ஒவ்வொரு அமைப்பின் நம்பகத்தன்மையும் அது செயல்படும் விதத்தை பொருத்தே அமைகிறது. அரசியல் சட்டப்படி ஏற்படுத்திய எல்லா அமைப்புகளையும், நாம் வலுப்படுத்த வேண்டும். சரியான முடிவுகளை எடுக்க உதவ வேண்டும். தவறும் பட்சத்தில் தவறுகளை திருத்தும் நடவடிக்கைகள் அவசியம். நமது நாடாளுமன்றம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் பல சட்டங்களை இயற்றியுள்ளது. எதிர்காலத்திலும் இயற்றும். மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மக்களும் மக்கள் அமைப்புகளும் விவாதித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பொதுக் கருத்துக்களை எட்டலாம். பிறகு அவற்றை அரசின் கவனத்துக்கும் கொண்டு வரலாம். இதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம். 

அதே சமயம் தங்களுடைய கருத்துக்களை மட்டும்தான் நாடாளுமன்றம் ஏற்க வேண்டும். அதுவே சட்டமாக்கப்பட வேண்டும் என்று எவரும் பிடிவாதம் பிடிக்கக் கூடாது. நாட்டுக்கு உகந்த சட்டம் இயற்றும் வல்லமையும் அதிகாரமும் கொண்டது நாடாளுமன்றம். அதன் பணிகளில் மற்றவர்கள் குறுக்கிட முடியாது. ஊட்டச் சத்து குறைவால் பெண்கள் அதிலும் குறிப்பாக கர்ப்பமுற்ற தாய்மார்கள், இளம் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கண்டு அவர்களின் துயரம் தீர நாடாளுமன்றத்தின் இளம் உறுப்பினர்கள் கட்சி வேறுபாட்டை கடந்து தங்களுக்குள் இணைந்து செயல்பட்டு தொண்டு செய்து வருகின்றனர். இதைப் போலவே பிற பிரச்சினைகளையும் உறுப்பினர்கள் கூட்டாக தீர்க்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. 

நாட்டின் அரசியல், பொருளாதார, கலாசார, சமூக வாழ்க்கையை அரித்துக் கொண்டிருக்கும் புற்று நோய்தான் ஊழல். அதை அகற்றியே தீர வேண்டும். அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை, சமூகம் ஆகிய அனைத்து அங்கங்களுமே இதை எப்படி களைவது என்று தீர்மானிக்க வேண்டும். அந்த நடவடிக்கையானது எளிதாக நிறைவேற்றக் கூடியதாக, தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும். ஊழல் நடக்காமல் தடுக்கவும், ஊழல் நடந்து விட்டால் அதை செய்பவர்களை கடுமையாக தண்டிக்கவும் வழிமுறைகள் அவசியம். இந்தியர்களின் சிந்தனை கூர்மையானது. நடுநிலையானது. மனிதாபிமானமுள்ளது என்று உலக அளவில் பாராட்டு பெற்றது. எந்தவகையிலும் தீவிரமான அணுகுமுறை கூடாது. நமது அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும். நமது நிர்வாக மேம்பாடு அடைய வேண்டும். இந்த நாட்டின் அரசியல் சட்டம் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவை தனித்தும் வலுவானதாக இயங்க முடிகிறது. சிறப்பான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்து தரப்பட்டுள்ளன. எந்த அமைப்பும் கையை மீறி போகாத வண்ணமும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தவும் சரி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் சட்டம் ஏற்படுத்திய அமைப்புகள் அனைத்துமே நிலையானதாகவும், வலுவானதாகவும் செயல்பட்டு வருகின்றன. 

நாம் நீதியின் பக்கமும், நல்ல நெறிகளின் பக்கமும்தான் நிற்கிறோம். நம்முள்ளே சகிப்பு தன்மையும் ஒற்றுமை உணர்வும் ஜனநாயக உணர்வும் மிகுந்திருப்பதால் முற்போக்கான பொறுப்புள்ள நாடாக திகழ்கிறோம். வளர்ச்சி பாதையில் அடிபோடும் போது நம்முடைய விழுமிய நெறிகளையும் அடையாளங்களையும் நாம் இழக்காமல் இருப்பது முக்கியம். இவ்வாறு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்