தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்கள் லோக்சபையில் இருந்து வெளிநடப்பு

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
vijayashanthi

 

புதுடெல்லி, மார்ச் - 5 - பாராளுமன்றத்தின் லோக்சபையில் தனி தெலுங்கானா பிரச்சனையை கிளப்பிய தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பாராளுமன்றத்தின் லோக்சபை நேற்று காலை கூடியதும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், விஜயசாந்தி எம்.பி. ஆகியோர் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தனி தெலுங்கானா பிரச்சனையை கிளப்பி சபையின் மையப்பகுதிக்கு விரைந்தனர். தங்களது கோரிக்கைக்கு இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

 சபையின் மையப்பகுதியில் இருந்த அந்த கட்சி எம்.பி.க்களை அவரவர் இருக்கைகளுக்கு செல்லுமாறு சபாநாயகர் மீராகுமார் கேட்டுக்கொண்டார். சபையில் அமைதியை ஏற்படுத்தும்படியும் அவர் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் எழுந்து அவர்களும் தனி தெலுங்கானாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். அவர்கள் தங்களது வாய்களை கறுப்பு துணியால் கட்டியபடி  சபைக்கு வந்திருந்தனர். இதன் மூலம் அவர்கள் தங்களது பிரச்சனையை சபைக்கு வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள் வாயில் கட்டியிருந்த கறுப்பு துணியை அகற்றுமாறு சபாநாயகர் மீராகுமார் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் அந்த கறுப்பு துணியை அகற்ற மறுத்துவிட்டனர். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபையில் அமைதி ஏற்படாத நிலையில் சபையை 11.15 மணிவரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். அதன்பிறகு சபை மீண்டும் கூடியபோது இதே பிரச்சனையை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்களும் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த தெலுங்கானா பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு சபாநாயகர் மீராகுமார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த சந்திரசேகரராவ், விஜயசாந்தி ஆகியோர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மற்ற  தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.   இந்த வெளிநடப்பை அடுத்து லோக்சபையின் கேள்வி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: