முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரதினத்தில் கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா உறுதி

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஆக.- 16 - தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும்  என்பதே எனது அரசின்  தலையாய குறிக்கோள் ஆகும் என்று கோட்டையில் சுதந்திரதின கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். நேற்று சென்னை கோட்டையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு  தேசிய கொடியை ஏற்றிவைத்து முதல்வர் ஜெயலலிதா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுந்திரதின நல்வாழ்த்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மூன்றாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுள்ள இத்தருணத்தில், அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் வளம் ஏற்படும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை எனது அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது.  வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளில் அனைத்து தரப்பு மக்களும் தன்னிறைவு பெறுவது ஒரு சிறந்த பொருளாதாரக் கோட்பாடாகும்.  அந்த வகையில், மக்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சில பொருட்களை, விலை இன்றி, எங்கள் அரசு வழங்கி வருகிறது.  விலையின்றி இவ்வாறு வழங்குவதை இலவசம் என்று நாங்கள் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
ஏழை, எளியவர்களுக்கு இவ்வாறு பொருட்களை விலை இன்றி வழங்குவது மக்கள் நலன் பேணும் அரசின் கடமை ஆகும். எனவே தான், நான் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை, விலை ஏதுமின்றி வழங்க ஆணையிட்டேன்.
அதே போன்று, வாழ்வாதாரம் ஏதும் இன்றி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இயலாமல் உள்ள முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்தேன்.  இந்த அடிப்படையில் தான், பெண்களின் வாழ்க்கை வசதிக்காக மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் துவங்க உள்ளோம். ஆடம்பரத் தேவைகள் கூட அத்தியாவசியத் தேவைகளாக மாறி விட்ட இன்றைய நவீன யுகத்தில், குடும்பத் தலைவிகளின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட உள்ளன.  அதே போன்று தான், அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமாக விளங்கும் மின் விசிறியையும் மகளிருக்கு வழங்க உள்ளோம்.
இதேபோன்று, தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு, வேட்டி​சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்தத் திட்டத்தை இலவசம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் திட்டமாகவும்; கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் திட்டமாகவும் தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசே வழங்கும் அதே நேரத்தில், இது ஒரு நிரந்தரத் தீர்வு என்று எனது அரசு கருதவில்லை.   மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைக்கு அரசை எப்போதும் சார்ந்து இராமல் தங்கள் சொந்தக் கால்களிலேயே நின்று, தங்களுக்குத் தேவையானதை தாங்களே வாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்களது பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான் எனது தலைமையிலான அரசின் எண்ணம் ஆகும்.  ஏழைகள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டுமெனில், ஏழை, எளிய மக்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது மக்கள் அரசின் கடமை ஆகும். இந்த அடிப்படையில், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் உன்னத நோக்கத்தோடு, வரும் ஐந்து  ஆண்டுகளில் 7 லட்சம் ஏழை, எளியோருக்கு தலா 4 ஆடுகள் வழங்கும் திட்டத்தை, அதாவது 28 லட்சம் ஆடுகள் வழங்கும் திட்டத்தை எனது அரசு செயல்படுத்த உள்ளது.  இந்த ஆடுகள் வழங்கும் திட்டமும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் துவக்கப்பட உள்ளது.  ஏழை, எளியவர்களின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கும் இன்னொரு மகத்தான திட்டம் தான் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின்படி 5 ஆண்டுகளில், 60,000 கறவை மாடுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்த இரண்டு திட்டங்களிலும் வழங்கப்படும் ஆடுகள் மற்றும் கறவை மாடுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பயனாளிகளுக்கே வழங்கப்பட்டு, ஏழை, எளியவர்களின் உரிமை நிலை நாட்டப்படும் என்று உறுதியளிக்கின்றேன் என்று முதல்வர் ஜெயலலிதாபேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்