முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்குவார் சத்திர துணை மின்நிலையம்:- ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.- 17 - தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில்,  தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் 227.35 கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள 400 கி.வோ துணை மின் நிலையத்தினை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்து தமிழக மக்களுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்கி, தமிழகத்தை மின்மிகு மாநிலமாக மாற்றிடவும், மாநிலம் முழுவதும் மின் விநியோகத்தை சீர்படுத்தி மக்களுக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்கிடவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த துணை மின் நிலையம் வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தினை மின்பகிர்மானம் செய்து சுங்குவார்சத்திரம் பகுதியில் வழங்குவதற்கு பெரிதும் உதவும். ஸ்ரீபெரும்புதூரில் தற்சமயம் உள்ள 400 கி.வோ. துணை மின் நிலையம் மட்டுமே சென்னை மற்றும் புறநகர் பகுதி மின்பகிர்மானத்திற்கு உதவுகிறது. தற்போது இந்த புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுவதால் ஸ்ரீபெரும்புதூர் 400 கி.வோ துணை மின் நிலையத்தின் பளுகுறைந்து சென்னை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதிகளில் மின் விநியோகம் சீர்பட வழி வகுக்கும்.
இத்துணை மின் நிலையம் 315 எம்.வி.ஏ திறனுள்ள இரண்டு 400/230 கி.வோ மின் மாற்றிகளையும், 200 எம்.வி.ஏ திறனுள்ள இரண்டு 400/110 கி.வோ மின் மாற்றிகளையும் மற்றும் அதற்குண்டான மின் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது.
இத்துணை மின்நிலையம் 400 கி.வோ தொடரமைப்பில் 2 ஞ் 600 மெ.வா. வடசென்னை அனல் மின்நிலையம், இரண்டாம் கட்டம் மட்டுமின்றி அலமாதி 400 கி.வோ துணை மின் நிலையம், ஸ்ரீபெரும்புதூர் 400 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் புதுச்சேரி 400 கி.வோ துணை மின் நிலையம் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.
இத்துணை மின் நிலையத்திலிருந்து ஒரகடம், நோக்கியா, ஆரணி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் (மாம்பாக்கம்) 230 கி.வோ துணை மின்நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்.
வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் அலமாதி 400 கி.வோ துணை மின் நிலையத்திலிருந்து வரும் மின்தொடரமைப்பு நான்கு வழி சுற்றுப்பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மின் தொடர்பாதை அமைப்பதற்கு தேவையான நிலத்தின் அளவு பாதியாக குறையும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் 227.35 கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள 400 கி.வோ துணை மின் நிலையத்தினை இன்று தலைமை செயலகத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலமாக துவக்கி வைத்து தமிழக மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த துணை மின் நிலையம் மூலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்னழுத்தம் சீராக்கப்படுவது மட்டுமன்றி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்ச்சத்திரத்தில் துணை மின் நிலையத்தினை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்ததற்காக அப்பகுதியைச் சேர்ந்த சரளா என்பவர் நன்றி தெரிவித்து பேசியதாவது,  என்  பெயர் சரளா, நான் சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவள். நான் கூலி வேலை செய்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் அடிக்கடி கரண்ட் கட் ஆகிறது. அதனால் எங்கள் குழந்தைகள் படிப்பும், விவசாயமும் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இப்போது எங்கள் கிராமத்தின் அருகில் இந்த துணை மின்நிலையம் அமைக்கப்பட்டதால், எங்கள் குழந்தைகளும், எங்கள் விவசாயமும் பெரிதளவில் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இனிமேல் சீரான மின்சாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த உதவியை செய்த ஜெயலலிதாவுக்கு எங்கள் கிராமம் சார்பாகவும், எங்கள் பகுதி கிராம மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் துணை மின்நிலையத்தினை திறந்துவைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
அனைவருக்கும் எனது ஆன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுங்குவார்த்திரத்தில் 400 கே.வி உள்ள  இந்த துணை மின் நிலையத்தை இன்று துவக்கி வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் அந்த பகுதியில் மின் அழுத்தம் சீர் செய்யப்படும் என்று நம்புகிறேன். அப்பகுதி மக்கள் இந்த துணை மின்நிலையத்தால் பயன்பெறுவதோடு அப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவும்  என்ற நம்பிக்கையை தெரிவித்து உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், எரிசக்தித்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்