முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ஓ.பி.எஸ். உறவினர்: கோவை கெமிக்கல் கம்பெனி மேலாளர் படுகொலை

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை,ஆக.- 17 - கோவை கெமிக்கல் கம்பெனி மேலாளர் படுகொலை செய்யப்பட்டார். இவர் தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினராவார்.  கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் பீளமேடு பகுதியில் கெமிக்கல் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். சத்தியமூர்த்திக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்தான் திருமணம் நடைபெற்றது. இரண்டாவது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்.  கோவையில் தான் பணிபுரியும் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்து விட்டு வாரம் ஒரு முறை தேனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வருவது சத்தியமூர்த்தியின் வழக்கம். வழக்கம் போல் விடுமுறை நாட்களில் தேனிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் கோவைக்கு சத்தியமூர்த்தி சென்றார். பின்னர் தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு சென்றிருந்த போது கம்பெனியின் பின்புறம் கொள்ளையர்கள் நின்றிருந்தனர். 

சத்தியமூர்த்தியை கண்டதும் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தேங்காய் உரிக்கும் கம்பி, இரும்பு ராடு மற்றும் அரிவாள் கொண்டு அவரை தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்பு கம்பெனிக்குள் இருந்த ரூ. 14 ஆயிரம் ரொக்கம், நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாயினர். 

காலை 9.30 மணியளவில் பணிக்கு வந்த டிரைவர் விக்னேஷ், மேலாளர் சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ்பூஜாரி, துணை கமிஷனர் ஹேமா கருணாகரன், உதவி போலீஸ் கமிஷனர் சந்திரமோகன்,பாலாஜி சரவணன், குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, சக்திவேல், கனகசபாபதி, ராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் சித்ராவும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்ததில் சிறிது தூரம் சென்று நின்றது. யாரையும் பிடிக்கவில்லை. இந்த கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை, கொள்ளை சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கார் நம்பரை வைத்து டோல்கேட்டுகளில் விசாரணை நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்