முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சிமெண்ட்-மணல்-ஜல்லி விலை குறையும் எஸ்.பி.வேலுமணி தகவல்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 18 - ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் சிமெண்ட், மணல், ஜல்லி விலை குறையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். நேற்று சட்டப்பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்து பேசியதாவது:- பல சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்காக்கள், உயிரியல் மென்பொருள் பூங்கா ஆகியவற்றை அமைக்கும் முயற்சியிலும் டிட்கோ ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டு டான்செம் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலங்குளம் சிமெண்ட் ஆலையின் உற்பத்தித்திறனை ரூபாய் 165 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி, 2 லட்சம் டன்னிலிருந்து 4 லட்சம் டன்னாக உயர்த்தவும், அரியலூர் சிமெண்ட் ஆலையின் உற்பத்தித்திறனை ரூபாய் 350 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி, 5 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன்னாக உயர்த்த,முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் சீரிய முயற்சிகளினால், சிமெண்ட் விலை விரைவில் குறையும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் காரணமாக செங்கல், ஜல்லி, மணல் ஆகிய கட்டுமான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நிறுவனங்களில், ஒரு முன்னோடி நிறுவனமாக திகழும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,  முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2002-2003-ம் ஆண்டில் காகித இயந்திரம் எண்.1, காகித இயந்திரம் எண்.2 ஆகியவற்றில் காகித உற்பத்தியை ஆண்டொன்றிக்கு 1,80,000 மெட்ரிக் டன்னிலிருந்து 2,30,000 மெட்ரிக்டன்னாக அதிகரிப்பதற்கான மேம்பாட்டு திட்டங்கள் செய்ல்படுத்தப்பட்டன. மேலும் தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி தனது ஆலையினை விரிவாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்  திட்டமிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் இயங்கிவரும் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் மேம்படுத்த எவ்வித சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

கடந்த மாதம் மேற்கொண்ட தொழில்துறை ஆய்வுக்குபின்னர் வழங்கிய அறிவுரைகளின்படி செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு, சுமார் ஒன்றே முக்கால் லட்சம் (1.75 லட்சம்) டன்கள் உப்பு உற்பத்தி செய்யும் தமிழ்நாடு உப்பு நிறுவனம், முதல்வர் ஜெயலலிதா அறிவுரைப்படி, நடப்பாண்டில் தனது உப்பளபரப்பினை விரிவுபடுத்தவும், பணிகளை நவீனமயமாக்கவும் உள்ளது.

தமிழ்நாட்டின் கனிம வளங்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் முறையன உற்பத்தி பெருக்கத்திற்கு தேவையான நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் பணிகளை தமிழ்நாடு கனிம நிறுவனம் மேற்கொள்ளும். குத்தகைக்கு விடப்பட்ட சுரங்கங்களைத் தீவிரமாக கண்காணிக்கவும், அங்கு தவறுகள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறையானது புலப்படங்களை கணினிமயமாக்கி, புவியியல் தகவல் முறைமை ஒன்றை உருவாக்கி, செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுதொழில் முனைவோருக்கு உதவி செய்யும் பொருட்டு, குறைந்த வட்டியில் நிதியுதவி வழங்கும் பணியில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) ஈடுபட்டுள்ளது. மேலும் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவுகளிலிருந்து வரும், புதிய தொழில் முனைவோருக்கு பிணைய சொத்து இல்லாமல் கடன் வழங்கும் திட்டத்தினை, டிக் நிறுவனம் செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

கரும்பு விவசாயிகளின் நலனில் பெரும்பங்கு வகிக்கும், சர்க்கரை ஆலைகளை மேம்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதில் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்பேரில், பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. சர்க்கரை ஆலைகள் மேம்படுத்தப்படுவதுடன், அங்கு 183 மெகா வாட் அளவுக்கு மின்சார உற்பத்தியும் செய்யப்படும். 1991-ம் ஆண்டு முதல், முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், எடுத்த முயற்சிகள் காரணமாக, இந்தியாவில், தொழில்துறையில் தமிழ்நாடு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. கார் மற்றும் கார் உதிரிபாகங்கள் தயாரிப்பில் 30 முதல் 35 விழுக்காடும், மின்னணஉ சாதனங்கள் உற்பத்தில்யில் 20 முதல் 25 விழுக்காடு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் 15 விழுக்காடும் ஜவுளி உற்பத்தியில் 20 முதல் 25 விழுக்காடும், தோல் பொருட்கல் தயாரிப்பில் 35 முதல் 40 விழுக்காடு பங்கு இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில், தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் என்ற சிறப்பு, இத்தகைய பெருமைகளை எல்லாம் தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தந்தவர், முதல்வர் ஜெயலலிதா என்பதை உறுதிப்பட கூறி அவையில் பதிவு செய்கிறேன்.

உலகின் மிகபெரிய பொருளாதார சக்தியான, அமெரிக்க நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிகிளின்டன் முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்று சாதனைகளை அறிந்து, தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்து பாராட்டி வாழ்த்தியது என்பது, இந்திய துணைக் கண்டத்தில் உள்ள 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள வேறு எந்த முதல்வருக்கும் கிட்டிடாத தனிபெருஞ்சிறப்பாகும். இச்சந்திப்பின்போது, முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து விவாதித்தார்கள். உலைகத்தலைவர்களின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திரும்பவைத்து, மீண்டும் தமிழகத்தில் ஒரு தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர் ஜெயலலிதா. 

இது ஒரு வரலாற்று சாதனைமிக்க நிகழ்வாகும்.  முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, தொழில்துறையில் சரித்திர சாதனை படைத்து, இந்திய துணைக் கண்டத்தில், தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெறும் என்று உறுதி கூறி தமிழகத்தின் நிரந்த முதல்வர் ஜெயலலிதாவின் மேலான ஆலோசனை வழிக்காட்டுதலுடனும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கீழ்கண்ட அறிவிப்புகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்