முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.82 கோடி மதிப்பில் 50 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நவீன கிடங்குகள்-செங்கோட்டையன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 18 - ஸ்ரீரங்கம் மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் தலா ரூ.4 கோடி செலவில் காய்கறி, பழங்களுக்காக குளிர்பதன வணிக வளாகங்கள் அமைக்கப்படுவதுடன், தமிழகம் முழுவதும் 50 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.82 கோடி செலவில் நவீன கிடங்குகள் அமைக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.  தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசியபோது கூறியதாவது:-  10 மாவட்டங்களில் இயங்கிவந்த விதை சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது சரிவர இயங்காத நிலையில் உள்ளன. விவசாயிகளுக்கு தரமான விதைகளை உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கும் வகையில் இந்த விதை சுத்திகரிப்பு நிலையங்கள் 5.25 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படும். இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புதுமையான திட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி 4 கோடி ரூபாய் மதிப்பில் மண்வளம், உரப் பரிந்துரை, இடுபொருள் விநியோகம், நுண்ணூட்ட சத்துக்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கையேடு ஒன்றினை 21 லட்சம் விவசாயிகளுக்கு  முதற்கட்டமாக வழங்கப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  பெருநகர மக்களின் அன்றாட  காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 17 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில் காய்கறி விற்பனை மையங்கள் துவக்கப்பட்டு, பெருநகர மக்களுக்கு காய்கறிகள் நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும். 

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு தோட்டக்கலை பண்ணையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் மலர்கள் மற்றும் காய்கறி பயிர்கள் பசுமை குடில்களில் சாகுபடி செய்யப்படுவதுடன், மலர் சாகுபடிக்கு மாதிரி செயல் விளக்க மையமும் அமைக்கப்படும். 

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து, பாதுகாத்து, விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிடங்குகள் உதவுகின்றன. விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் 82 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் நவீன கிடங்குகள் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் 4 கோடி ரூபாய் செலவில் வாழை மற்றும் இதர காய்கறிகளுக்காகவும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில்  4 கோடி ரூபாய் செலவில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்காகவும் குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும். 

காய்கறி மற்றும் பழங்களுக்கென தேனி, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களிலும், புளிக்கென தருமபுரி மாவட்டத்திலும், மிளகாய் மற்றும் எலுமிச்சைக்கென திருநெல்வேலி மாவட்டத்திலும் 11 கோடி ரூபாய் மதிப்பில் குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்படும். 

விவசாயிகளையும், வியாபாரிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் 4.8 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக பயன்பாட்டில் இல்லாத ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகளுக்கென தனியாக கடைகள் கட்டித் தரப்படும். 

விவசாயிகள் வேளாண் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யவும், தற்போது வழங்கப்படும் பொருளீட்டுக் கடன் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 

சேலம் மாவட்டம், ஆத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் பவானி ஆகிய இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்