முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி ஸ்டிரைக் நாள்தோறும் 3500 கோடி வருவாய் பாதிப்பு 45 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சேலம் ஆக.- 18 - டோல்கேட் கட்டண குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இதனால் நாள்தோறும் அரசு மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.3500 கோடி வருவாய் இழப்பும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் டோல்கேட்களில் சீரான சுங்கவசூல் செய்ய வேண்டும், லோடு ஏற்றாத லாரிகளுக்கு 25 சதவீதம் டோல் வரி விதிக்க வேண்டும், 3 நபர் இன்ஸ்சூரன்ஸ் பிரிமீயத்தை குறைக்க வேண்டும்.டீசல் விலை குறைக்க வேண்டும்,டயர் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ந் தேதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட உத்தரவுகளை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் தென் மாநிலங்களான தமிழ்நாடு,கர்நாடகா, ஆந்திரா,கேரளா,பாண்டிச்சேரி மற்றும் மகாராஷ்டிரா என 6 மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 26 லட்சம் லாரிகள் ஈடுபடுகின்றன.
இந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு கடந்த 14 ந் தேதி முதல் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கான சரக்கு புக்கிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மும்பை,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் 1000 த்திற்க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்கு லாரிகள் தினமும் செல்வது வழக்கம் இவை அனைத்தும் புக்கிங் நிறுத்தப்பட்டதால் செல்லவில்லை. இதனால் இந்த லாரிகள் மூலம் செல்லும் சரக்குகளும் தேக்கமடைந்துள்ளன.
சேலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜவ்வரிசி,தேங்காய்,வெல்லம், மேட்டூரில் இருந்து தனியார் இரும்பு நிறுவனங்களில் இருந்து இரும்பு கம்பிகள், சங்ககிரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள்,கல் மாவு ஆகியவையும், ஈரோட்டில் இருந்து மஞ்சள், எண்ணெய் வகைகள்,பருப்பு வகைகளும், ஊட்டியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும, கேரளாவிற்கும் காய்கறிகளும், நாமக்கலில் இருந்து முட்டைகளும், ஈரோடு மாவட்டம் பல்லடத்தில் இருந்து கோழி கறிகளும்,மராட்டிய மாநிலத்தில் இருந்து பருப்பு வகைகள்,கோதுமைகள்,நூல்கள்,பஞ்சு நூல்களும், பிற மாநிலங்களுக்கு நாள்தோறும் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தினால் கடந்த 3 தினங்களாக 6 மாநிலங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் செல்லவில்லை.இந்த லாரி ஸ்டிரைக் தொடங்கினால் 6 மாநிலங்களிலும் காய்கறிகள், முட்டைகள், பால், பருப்பு வகைகள், பஞ்சு நூல், எண்ணெய், இரும்பு கம்பிகள், சிமெண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த லாரி தொழிலை நம்பி உள்ள டிரைவர், கிளீனர், லாரி உரிமையாளர்,பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பெயிண்டர்,டிங்கர்,பாடி கட்டும் தொழில்,மெக்கானிக்குகள், ரோட்டோர தாபாக்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலை நம்பியுள்ள 45 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ 500 கோடி சரக்குகள் தேக்கமடையும், 6 மாநிலங்களிலும் வேலை நிறுத்தம் தொடர்வதால் அரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.3500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி நிருபர்களிடம் கூறியதாவது.மத்திய அரசுடன் லாரி வேலை நிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று தீர்க்கமான முடிவு எடுத்து அறிவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரும் முடியும் என்று கூறி நாங்கள் புறக்கணித்துவிட்டோம். திட்டமிட்டப்படி லாரி ஸ்டிரைக் இன்று நள்ளிரவு முதல் தொடங்கும் என்றார்.
மாநில பொருளாளர் சென்னகேசவன் நிருபர்களிடம் கூறுகையில்.லாரி தொழிலை பாதுகாக்கும் மத்திய அரசின் கவனத்தை எங்கள் தொழிலின் மீது பட செய்வதே எங்கள் நோக்கம். இந்திய அளவில் மாராட்டிய மாநிலத்திற்கு அடுத்து தமிழகத்தில் 1.50 லட்சம் லாரிகள் இயக்கப்படுகிறன். அதில் சேலம்,நாமக்கல்,ஈரோடு,கோவை மாவட்டங்களில் 50 சதவீதம் இயக்கப்படுகிறது. எனவே மாட்டிய,தமிழக லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டாலே நாடு முழுவதும் சரக்கு பரிமாற்றம் தடைப்படும். இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் அவரிடத்திலும் கோரிக்கை வைத்துள்ளோம்
இந்த லாரிகள் வேலை நிறுத்தத்தில் மணல் லாரிகள், டேங்கர் லாரிகள் உள்பட அனைத்து தரப்பு சரக்கு லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. அத்தியாவசிய லாரிகளான மருந்து,குடிதண்ணீர், பால்,ரேசன் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு இந்த ஸ்டிரைக்கில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!