முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் டாக்கா செல்கிறார்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

ஷில்லாங், ஆக.19 - பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் டாக்கா செல்கிறார். அவருடன் மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவும் டாக்கா  செல்கிறார். இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங்  அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக தங்கள் நாட்டிற்கு வருகை தருமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த வேண்டுகோளை ஏற்று பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் வங்காள தேசத்திற்கு செல்ல இருக்கிறார். தனது வங்காளதேச பயணத்தின்போது மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவும் உடன் வர வேண்டும் என்று மன்மோகன் சிங் விரும்புகிறார். இது தொடர்பாக முகுல் சங்மாவிற்கு மன்மோகன் சிங் ஒரு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை முகுல் சங்மா நேற்று பெற்றுக்கொண்டார்.

பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக  முகுல் சங்மா கூறினார்.

மேலும் பிரதமருடன் இந்த சுற்றுப்பயணத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும்  பங்கேற்கிறார். 

அதனால் பிரதமரின் வங்காளதேச பயணத்தில் இவ்விரு மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்கிறார்கள்.

வங்காளதேசத்தை ஒட்டியுள்ள பகுதிகளாக மேகாலயாவும் மேற்கு வங்காளமும் இருப்பதால்  பிரதமரின் இந்த பயணத்தின் போது இவ்விரு முதல்வர்களும் உடன்செல்வது பயனுள்ளதாக அமையும் என்று கருதுவதால் இரு மாநில முதல்வர்களுக்கும் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - வங்காள தேச உறவில் இவ்விரு மாநிலங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. எனவே இவர்களும் வங்காள தேசத்தில் பயணத்தில் கலந்து கொள்வது சாலச்சிறந்ததாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் கருதுகிறது. 

வங்காளதேசம் ஒரு முக்கியமான அண்டை நாடு என்று முகுல் சங்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் எந்த தேதியில் பிரதமர் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்